திங்கள், 9 பிப்ரவரி, 2015

சல்யூட் சினிமா

"வெல்டன் தனுஷ்" இந்த வார்த்தை மட்டும் பாராட்டுவதற்கு போதுமானதாக இருக்கவே முடியாது.கட்டியணைத்து முத்தமிட்டு உச்சி நுகர நினைத்தால், உச்சி நுகரவே முடியாத உயரத்தில் அமிதாப் நிற்கிறார்.இருவரையும் தவிர்த்து படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்ட நினைத்தால் 1000 படங்களுக்கு இசையமைத்து,"எப்பவும் நான் ராஜா" வென நிற்கிறார் நம் இளையராஜா. ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமோ காட்சிக்கு காட்சி அழகியலை நேர்த்தியாக வார்த்து,கோர்த்து இது என்சினிமா என்பது போலொரு முனைப்பை கேமிராவில் செதுக்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் "ஒருபடி மேல் நான் தான்" என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பால்கி. கிரியேட்டிவ் இயக்குநருக்கு கூடவே பிறந்த பிறப்பு போல. கைதட்டல்கள்தான் கலைக்கும்,கலைஞர்களுக்குமான வெகுமதி. அதற்காக கைகள் சிவக்கும் அளவா கைதட்டல்கள் வாங்குவது? வாங்கிவிட்டதே "ஷமிதாப்"!! இது legends சினிமா. இந்த legends வரிசையில் நடிப்பின் அனுபவ முதிர்வை முன்வைத்து தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார் தனுஷ். இனி இந்திய சினிமா இவருக்கு இனிமா கொடுக்க வாய்ப்பே இல்லை.. நிறைய அசாத்தியங்கள் ஷமிதாப்பில் சாத்தியங்களாகியிருக்கின்றன அதில் சில... 1. திரைக்கு முன்னால் மட்டும் தான் தனுஷ், அமிதாப் இருவரின் ஈகோ. திரைக்கு பின்னால் அப்படி ஒன்றும் இல்லை என்பது போல நிறைய காட்சிகள். தனுஷிடம் அமிதாப் அடிவாங்குவதோடு நின்றுவிடாமல் வோறொரு காட்சியில் அவரோடு கட்டி உருண்டு புரண்டு சண்டையிடும் அளவு இறங்கி அ(ந)டித்திருப்பது ஆஸம். எந்த காட்சியிலும் தன்னுடைய உச்ச நட்சத்திர அடையாளங்களை பிரதிபலிக்காத விதம் அருமை.. ( இந்த அர்ப்பணிப்புதான் அமிதாப்பை இன்றும் உச்சத்தில் வைத்திருக்கிறது.. )சூப்பர்ஸ்டார் ஷமிதாப்பாக தனுஷின் அறிமுகம் அமர்க்களம் என்றால் ப்ளாஷ்பேக்கில் ,போதையில் சருகுகளில் விழுந்து கிடக்கும் பிரக்ஞையற்ற அறிமுகத்தில் அமிதாப் ஜி அட்டகாசம் ஜி. "மனம்" தெலுங்கு படத்தில் டாக்டர் பிரதாப் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களில் கடந்து போகும் துணைநடிகராக அசத்திய அசாத்திய துணிவு அமிதாப்பிற்கு மட்டுமே சாத்தியம்.. 2) ராஜ்குமார் ஹிரானி,அனுராக் பாசு, போனிகபூர்,ரேகா,ருக்மணி ,அபிநயா என போகிறபோக்கில் பிரபலங்கள் வந்துசெல்வது..மிரளவைத்த சாத்தியம்.. முதல் தர திரையரங்கம், முதல் வகுப்பு ரசிகர்கள்.. வாவ், மார்வ்லெஸ்,ஆஸம், என பாராட்டுகள் அப்லாஸ்கள்..தரைலோக்கல் அளவிற்கு இறங்கி விசிலடிக்க நினைத்து அடக்கி ரசித்த காட்சிகள் பல.. வகுப்பாசிரியர் முன் நடித்துக்காட்டும் சிறுவனின் நடிப்பிற்கும்,அந்த காட்சிக்கான பி(மு)ன்னணி இசைக்கும் முதல் விசில்.. தனுஷின் சைகை மொழி புரியாமல் அமிதாப் "சப்டைட்டில் சப்டைட்டில்"என அக்ஷராவிடம் கேட்கும் போதும், இந்த பையனுக்கும் சேர்த்து 3 டீ கொண்டுவரச்சொல்லி அக்ஷராவின் தோற்றத்தை கலாய்க்கும் போதும் , நீ எடுக்க போகும் படமாவது கலரா இருக்குமா? இல்ல அதுவும் கறுப்பாதான் இருக்குமா?எனஅக்ஷராவின் பேவரிட் கலர் பற்றிய கமென்ட்டை சிரிக்காமல் சிக்ஸர் அடித்த போதும் நிறுத்தமால் விசிலடித்திருக்க வேண்டும்.. தனுஷை புதைத்த இடத்தில் குரலை இழந்த அமிதாப் உடைந்து அழுவதும், அதே இடத்தில் பேசி பயிற்சி எடுப்பதுமாக படம் முடியும் தருணத்தில் மொத்த பார்வையாளர்களும் மனதிற்குள்ளேயே விசிலடித்திருக்க வேண்டும்.. (படம் முடிந்த பிறகு எழுத்துகள் ஓட அதன் பின் வரும் இசை............ சொல்ல முடியாத உணர்வுக்குள் தள்ளி விடுகிறது) காட்சி முடிந்து, திரையரங்கின் வெண்திரை பார்த்து வெளிவரும் வேளையில், " whisky is rare, baani is every where" என்று போதை ஏறிய அமிதாப்பின் குரல்,நம்மை பின் தொடர்வது போலொரு மாயை மனதின் பரப்பில் ஆழச்சூழ்ந்து விடுவது சாத்தியமான உண்மை!! எல்லாம் சரிதான்.. இந்த படத்தில் ஒரு குறைகூட இல்லையா என்ற கேள்வி எழும்தானே?? குறைகள் கண்டுபிடிப்பதற்கான இடத்தை ஷமிதாப் கொடுக்கவில்லை என்பது சிறந்த பதிலாக இருக்கும் தானே? சில கேள்விகளுக்கு மாற்று கேள்விதான் மாறாத நல்ல பதில்.!!. பாலா..