ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரிவு

பிறப்பு பிரிவெழுதும் முதல் கவிதை.. இறப்பு அக்கவிதையின்
கடைசிவரி..! நட்பு,காதல்,துரோகம்
இவை தவிர்த்து நம் வாழ்வில் பிரிவென்று வேறெதுவுமில்லை தானே? ஒரு பிரிவு தந்த வெற்றிடத்தை,தனிமையை இன்னொரு பிரிவு கண்ணீராலோ
அல்லது புன்னகையாலோ இயல்பாய் நிரப்பிச்செல்கிறது..

சில உறவுகளின் பிரிவு அவசியமானதாகி விடுகின்றன..
நட்பின் பிரிவென்பது புரிதலற்ற
தன்மையென ஏற்றுக்கொள்ள
யத்தனிப்பதே இல்லை நான்.

காதலின் பிரிவு மட்டுமே பிரிவின்
வலியை இயல்பாக மனதில் அறைந்து செல்கிறது.. ஒரு நிமிடத்திற்கு 60 நொடிகளென
உணர வைக்கிற ஓர் உயிர் வலி
காதல் பிரிவு.. பிரிந்த காதலியை
சந்திக்க கூடாதென்று புத்திக்கு
உரைத்தாலும் மானங்கெட்ட
மனதிற்கு உரைப்பதே இல்லை..
நினைவுகளின் விரல் பிடித்தே
நடக்கும் அழுதபடி.!

பிரிவு பரிட்சயமானவைகள் தாம்
எல்லோருக்குமே..சில வலி,
சில வழி.. எனக்கு வலி கொடுத்த
ஓர் பிரிவு வழி காட்டவும் தவறவில்லை. அது ரசித்து
வாழக்கற்றுக்கொடுத்திருக்கிறது..!

பிரிவு பற்றி எழுதி முடிக்கும் வேளையில் எங்கோ காற்றிலிருந்து
தவழ்ந்து வருகிறது."முற்றுபுள்ளி
அருகே நீயும் மீண்டும் சின்னப்புள்ளிகள் வைத்தால்
முடிவென்பது ஆரம்பமே"எனும்
நா.முத்துக்குமாரின் வரிகள்..

பிரிவு அழகானதே.. _ பாலா.

2 கருத்துகள்:

  1. நட்பின், உறவின், இறப்பின் - எல்லா வலியும் மனதைப் பிசையும் எனக்கு.

    அருமையான முதல் blog post. தொடர வாழ்த்துக்கள்! :-)

    பதிலளிநீக்கு