செவ்வாய், 15 ஏப்ரல், 2014

பிரிதலும்,பிரிதலின் நிமித்தமும்..

நகராட்சி உயர்நிலைப்பள்ளி
பத்தாம் வகுப்பு 'ஈ'பிரிவில்
முதல் வரிசையில் மூன்றாவது
ஆளாக அமர்ந்திருந்த குணக்கொடிக்கு..

அன்புள்ளவென எழுதத்தெம்பில்லாத அன்பனின்
முதல் கடிதம்.

அரசஇலைகள் சலசலக்கும்
வசந்தகாலமொன்றின் காலையில்
வட்டக்குளத் தாமரை மொட்டாக
சிரம் தாழ்த்தி பள்ளியேகி , பசித்த
வயிறுடன் சுதிசேராமல் கடவுள்
வாழ்த்துப்பாடி,தோழிகளோடு
ஓயாது சிரித்த நாட்களில்
வகுப்பறையெங்கும் சங்கீதச்
சிதறல்களாய் நிறைந்திருந்தாய்..

நீலம் பூத்த வெள்ளைத் தாவணியின் நுனிக்கசங்கலில்
முகம் துடைத்து ஒப்பனையற்று
உருப்பெறும் அன்றைய உனதழகு..

குட்டிச்சுவர் இளவட்டங்களின்
சலவட்டத்தனங்களை நெற்றிக்கண்
திறவாமல் சுட்டெரித்து அகலும்
தீர்க்கப்பார்வையில் பாரதி வழித்
தோன்றலாய் தினவுடன்
நீ நடைபோட்ட நாட்களை மறக்க
முடியுமா??

இடையதிரா நடையசைவில் சாமியாடும் உன் சடையாரத்தின்
பின் பித்தனாய் அலைந்த பத்து பேரில் நானும் ஒருவன்..

பள்ளி முடிந்த மாலை வேளையொன்றில், நேசமாகப்
புன்னகையித்து கைக்குட்டைக்குள் மறைத்து
வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாயை
என்னிடம் நீட்டி முயல்பாய்ச்சலாய்
நீ நகர்ந்த அந்த நாளின் தித்திப்பு
இன்றும் நாவிடுக்கில் தேனூட்டியபடி..

வறுமைக்கு வாக்கப்பட்ட நாளொன்றில், கணக்கு வாத்தியாரின் பிரம்படிக்குச்
சிறுமைப்பட்டு சிவந்த உள்ளங்கை
நிறத்தைக் கன்னப்பரப்பில் நாணமாக
நிரப்பி,தூரத்து உறவுக்காரன் விரல்
பிடித்து மேளம் முழங்க இல்லற
வாழ்வில் எட்டுவைத்து நீ மறைந்த
சேதியினை அம்பலப்படுத்தியது
அன்றைய தென்வடல் சூரைக்காற்று..

முன் நெற்றி முடியுதிர்ந்து,தாடையருகே நரை பிறந்த
என் இளமையின் இறுதியில்
பாலையத்து மாலையம்மன்
கோவில் திருவிழா விளக்கொளியில்
காணக்கிடைத்ததுன் முகம்..அன்று
பார்த்த அதே முகம்.. இன்று பச்சயமிழந்த
பயிர் போல உயிரற்று வாடி வதங்கியபடி..

கையிலொன்றும்,இடுப்பிலொன்றுமாக இரண்டு பிள்ளைகளின் தாயான நீ இன்னும்
சிறுபிள்ளைதான்..

"வெறுஞ்சிறுக்கி மவளே, வளவிக்கடையக் கண்டா, ஒங்காலடியில வேர் மொளச்சிருமே" விரல் பிடித்துகூட்டிப்போன உன் உறவுக்காரன் வசவுகேட்டு,
எசக்கத்து நீ நடந்த பாதையில்
புரண்டெழும் புழுதியில் தோன்றி
மறையுதடி வாழ்ந்து கெட்ட உன் வாழ்வின் மரண வலி..

அடியே குணக்கொடி.. உன்னிடம் கொடுக்கப்படாத என் கடிதத்தில் அந்துப்பூச்சிகள் அரித்தது போக எஞ்சியிருந்த
வார்த்தைகளில் இன்றும் கன்னிகழியாமல் நிற்கிறது
என் முதல் காதலும்,முதல் பிரிவும்!!
                              - பாலா.

(* சல வட்டத்தனம் - இளைஞர்களின்
குறும்பான கேலிப்பேச்சின் வட்டார
வழக்குச்சொல், எசக்கத்து - ஜீவனிழந்த நிலையின்  வட்டார வழக்குச்சொல்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக