இக்கதையில் வரும் ( கதையா?) சம்பவங்கள் அனைத்தும் கற்பனையல்ல.. தக்கனூண்டு
உண்மையும் இருக்கு...
"புகைபிடித்தல்,மதுஅருந்துதல்
உடல் நலத்திற்கு தீங்கானது"
(எதிர்கால முகேஷ்களின் நலனை
கருத்தில் கொண்டு...)
சொல்ற கதைய சுவாரசியமா சொல்லுவே.. இப்போலாம் படிக்கிறவிங்க கூட மசாலாத்தனமா
தான் இருக்காய்ங்க.. யாரோட மைன்ட் வாய்ஸோ ? இங்க வர கேக்குது..
சரி கதையோட கரு என்ன?
கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய காதல்
கதைதான்... (உஸ்ஸ்ஸ் நீயுமாடா??) கூலிங் பீர்கிடைக்காம
டாஸ்மாக்ல பொங்குற மாதரிலாம்
பொங்காதீங்க மக்கா.. காதல்ங்கற
பேர்ல பல்ப் வாங்கின கதை தான்..
வாழ்க்கைல இனி இந்த பொண்ண சந்திக்கவே கூடாது னு நினைக்கிற
ஒவ்வொரு ஆணும் அவ அன்பினாலோ,அல்லது இம்சையாலோ பைத்தியமானவங்கதான்..நான் மட்டும் செவ்வாய் கிரகத்துல இருந்தா குதிச்சேன்? நான் னா நான் இல்லீங்கோ.. நம்ம கதையோட ஹீரோ பிரபா என்கிற பிரபாததரிசனன்..
"காதலில் தயக்கம் தண்டனைக்குரியது; விநாடிகூட விரயமாதல் கூடாது"- வைரமுத்து!
கவிஞர் தீர்க்கதரிசிதான்..ஸ்டார்ட் மியூசிக்..! (அட!கதைக்குள்ள இன்வால்வ் ஆகுங்க வே )
'காதல் வேதாளம் மாதிரிடா; காலத்துக்கும் பெருஞ்சுமை,' கவிஅக்கா சொன்ன வார்த்தை
மாறி,மாறி மனக்கண்ணில் ஓட
பதறி விழித்துப்பார்த்தேன் மணி
இரவு11.35..ஆஃப் பண்ண மறந்த எப்.எம்மில் ' ஆழம் எது அய்யா,அந்த பொம்பள மனசுதான்ய்யா'
காலத்துக்கும் மறக்கமுடியாத
பண்ணைபுர பாட்டுக்கார ராஜாவின்
கணீர் குரல்..ஒலித்துக்கொண்டிருதது..
நெடுஞ்சாலையருகே அமைந்த வீடென்பதால்,இரவின் நிசப்தத்தை
வாகனங்களின் ஒலி,ஒளி தின்றுகொண்டிருந்தது,எப்.எம்மை ஆஃப் செய்து,மாடிப்படியிறங்கி முன் கேட் கதவின் க்ரீச்ச் சப்தம் கேட்காதவாறு திறந்து வெளியேறி
சாலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. நினைவுகளோ
பின்னோக்கிய படி...
(எஸ், ப்ளாஷ்பேக் தான்)
சில மாதங்களுக்கு முன்பு...
(தமிழ் சினிமா சம்பிரதாயத்த
மீறி கதையெழுதினா தமிழன்
இல்ல னு சொல்லிருவாய்ங்க
அதை மனதில் கொண்டே..)
50 ரூ கேட்டு 53 முறை "வெட்டிப்பயலே' னு அப்பன்கிட்ட
அர்ச்சனைவாங்கிக்கொண்டிருந்த
அற்புதமான காலை வேளை(த்தூ,,இதெல்லாம் ஒரு பொழப்பு)என்
மைன்ட் வாய்ஸ்தான்..
மொபைல் சிணுங்க, எரிச்சலுடன்
ஹலோ என்றேன்.. " டேய் நல்லவனே; எங்கஇருக்க? வெட்டிதானே? உடனே " மரணவிலாஸ்க்கு வா" எதிர்முனையில் கட்டளையிடும்
தொணியில் சுபா என்கிற சுபயோகச்செல்வியின் குரல்..
ம்ம் வர்றேன்,இம்ச ஃபோன கட்பண்ணித்தொலை.. கடுப்புடன்
கிளம்ப ஆயத்தமானேன்..
இப்போ சுபா யாரு?னு மைல்டா டவுட் வந்திருக்கனுமே?!! உங்களுக்கு...
சுபா,, அப்பாவழி உறக்கார பெண்,
பள்ளி வயது தோழி; அதிகப்பிரசங்கித்தனத்திற்கும்
உரிமையெடுத்துக்கொள்வதற்கும்
உள்ள வித்தியாசமறிந்த உற்ற தோழி.. இடம் பொருள் ஏவல்
பார்க்காமல் என் மானத்தை வாங்குவதில் எங்கப்பனுக்கு நிகரான இன்னொரு பிறவியும்
அவளே.. இந்த கதைக்கு இவ்ளோ
லாஜிக் போதும்னு நினைக்கிறேன்..
இடம் : மரண விலாஸ் ( அவ ஆபீஸ் கேன்டீனுக்கு நான் வெச்ச பேரு)
நேரம் : சரியா நினைவில்ல
(என்னைப் பொறுத்த வரை எனிடைம் ஏழரை தான் எனக்கு)
"சொல்லுங்க சுபயோகச்செல்வி மேம் ; எனி ஹெல்ப் ? சீக்கிரம்
சொல்லுங்க ஐம் பிஸி"கேலியுடன்
அவளருகில் அமர்ந்தேன்..
எரும,எரும நீ திருந்தவே மாட்டியா?
என திட்டிக்கொண்டே சாப்பிட்டியா?
இல்ல ஆர்டர் பண்ணவா? என அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கும் நேசக்காரி சுபா!!
'இல்ல வேணாம் இப்போதான் எங்கப்பன் மனசும்,வயிறும் நிறையற மாதரிரி திட்டினாப்ல..
நீ மேட்டர சொல்லு'என்ன பண்ணனும்?.. நான்!!
"நெல்லைல இருந்து அத்தையும்
திவ்யாவும் வர்றாங்கடா; அவங்கள
ரிசீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிப்போகணும்; அப்பாவும்,அம்மா ஆஸ்பிட்டல் போயிருக்காங்க; ப்ளீஸ் நீ அவங்கள ரிசீவ் பண்ணனும்; இன்னிக்கு முழுதும் ஆபிஸ்ல கான்ப்ரன்ஸ் மீட்டிங் இருக்கு,ஈவினிங் வர சத்தெடுப்பானுங்கடா" அலுப்பன்புடன் கொஞ்சல் மொழியில் கெஞ்சிக்கேட்டாள்!!
"ம்ம் ஓகே நான் போறேன்,மாசக்கடைசி ,சாம் கடைல அக்கவுண்ட் ஏறிட்டே இருக்கு
ஏதாச்சும் பாத்து செய்" திமிராவே
கேட்டேன் பணம் கொடு என..
'உன் ஒருத்தனுக்குத்தான்டா மாசம்
முழுதும் கடைசி' திட்டிக்கொண்டே
500ரூபாயை என் கையில் திணித்து,
திவ்யாவின் மொபைல் நம்பரை
சொல்லிக்கொண்டே நகர்ந்தாள்
சுபா..
ஹலோ திவ்யா வா? ஆமா நீங்க?
நான் சுபாவோட ஃப்ரண்ட் பிரபா..
உங்கள ரிசீவ் பண்ணச்சொல்லி
நம்பர் குடுத்தா..நீங்க இப்போ எங்க
இருக்கீங்க? "4 வது ப்ளாட்பார்ம்ல
இருக்கேன்" இப்படிதான் எனக்கு அறிமுகமானாள் திவ்யா என்கிற
திவ்யலக்ஷ்மி.. 'இவகிட்டதான்
பல்ப் வாங்கப்போற'னு கடவுள்
என் தலைல இடது கையால கிறுக்கி அனுப்பிருக்கான் னு சத்தியமா நினைச்சுகூட பார்க்கல.
அவள் சொன்ன 4வது ப்ளாட்பார்ம்க்கு வந்து மறுபடியும் நான் கால் பண்ண, இருக்கும் இடத்தைச்சொன்னாள், "ஸாரி கொஞ்சம் ட்ராபிக்,அதான் லேட் ஆகிருச்சு.என்றேன்."பரவாயில்லைப்பா வாங்க போகலாம்" என நெடுநாள்
பழகியது போன்றொரு முதல் அறிமுகத்திலே ஈர்த்தாள் திவ்யா
என்னை.. சுபா வீட்டிற்கு அழைத்துச்சென்ற சில நிமிடங்களில் ஏதோ ஒரு நொடியில்
திவ்யா மீதான ஈர்ப்பு என்னில் வேர்விடத்தொடங்கிற்று.
எப்போ ஊருக்கு ரிட்டன்?! திவ்யாவிடம் கேட்கத்தோன்றியபோது என் மனசுக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சுருச்சு!!." பார்த்த உடனே
காதலாடா?" னு பாப்கார்ன் மெஷினாட்டம் கொதிக்காதீங்க..
"ஒரு பொண்ண பிடிச்சுருக்குனு
சொல்ல காரணம் தேவையில்ல;
பிடிக்கலனு சொல்லத்தான் காரணம்
தேவைப்படுது எல்லா ஆம்பளைக்கும்" இந்த லாஜிக் தான் திவ்யாவை பிடிச்சதுக்கான ரீஸன்..
2நாள்ல கிளம்பிருவோம்ப்பா ;ஏன்
கேட்குற? என்பதுபோல் புருவமுயர்த்திய தொணியில்
எனைச்சாய்த்தாள்.. அந்தநொடி
முதல் திவ்யாவிடம் தொலைந்தது
என் மனசு...
சுபா வீட்டில் அவர்களை சேர்த்துவிட்டு,அவள் சொன்ன புத்தகங்களை எடுத்துக்கொடுத்து
கிளம்பிய என்னிடம் "தேங்க்ஸ்பா"
என்ற திவ்யாவின் கண்களணிந்திருந்த புன்னகைக்கு
இணையாக இவ்வுலகில் ஒன்றுமில்லையென்றே பிதற்றியது என் உயிரணுக்கள் ஒன்றுகூடி..
காதல் வந்த மனசுக்கு முதல் எதிரி
நட்பு; ஆனால் நட்போடு அணுகித்தான் காதலைச் சொல்லித்
தொலைக்க வேண்டிய அவல நிலை
ஆண்களுக்கும்,பெண்களுக்கும்.
2 நாட்கள் பழகிய பெண்ணிடம்
காதலைச்சொல்வது அவ்வளவு
சாதாரணமல்ல.( செருப்பால அடிப்பேன் னு சொல்றதில்ல இந்த காலத்துப்பொண்ணுங்க ;அடிச்சிட்டுதான் பேசவே செய்றாங்க) மான,ரோசத்துக்கு
பயந்தவனால் காதலிக்கவே முடியாது..
ஊருக்குச்செல்கிறேன் என திவ்யாவிடமிருந்து எஸ்எம்எஸ்..
பதிலனுப்பும் சாக்கில் அவளோடு
நட்பை வளர்க்கத்தொடங்கி நாட்கள்
பல கடந்தும் காதலைச்சொல்ல
தயக்கம். நெருக்கமாகப்பழகுவதில்
இருக்கும் சிக்கல் என்னவென்றால்
பிரியும் போது அதன்வலி இரட்டிப்பாகும். சுபாவிடம் சொல்லி
திவ்யாவின் சம்மதம் வாங்கிவிடலாம் என்ற துணிச்சலில்
காலத்தைக்கடத்தி,நட்புறவாடிக்
கொண்டிருந்தேன்..!!
சுபாவிடம் கூட சொல்ல முடியாத
இந்த காதல் விசயத்தை உதய் அண்ணனிடம் சொன்னேன்.. உதய்
20வருடப்பழக்கத்து நண்பன்; என்னைவிட வயதில் மூத்திருந்திருந்தாலும் எனர்ஜியான
இளைஞன்.." நல்லா பேசுறாண்ணே,
என்ன பிடிக்குமா னு கேட்டா பிடிக்கும் னு சொல்றா" அப்போ
அவளுக்கும் லவ் இருக்கும்லண்ணே?" என உதய்யிடம் ஏதேதோ நான் உலற..
"போன் ல பேசுறத,சிரிக்கிறத வச்சு
லவ் னு நினைக்காத;அது அவளோட குணமாக்கூட இருக்கலாம், நேர்ல ஒருமுறை
அவள சந்திச்சுப்பேசி உன் லவ்வ சொல்ல ட்ரை பண்ணு" என்று அட்வைஸ் டைப்ல ஐடியா கொடுத்த உதய்க்கு சரக்கு ட்ரீட்
வெக்கலனா இந்த சமுதாயம்
என்னைய சபிச்சிரும்ல?
இடம்; டாஸ்மாக்..
நிம்மதியைத்தொலைத்த ஆண்களின் வேடந்தாங்கல் !!
உதய்யோடு சேர்ந்து சரக்கடிப்பதில்
இருக்கும் சுவாரசியம் என்ன்னா
போதைஏறி மட்டையாகாம இருக்க
கவிதையா சொல்லி கலக்குவாப்ல
" அதிகாலையின் ஆழத்தில் ஒலிக்கிறது; குறுக்கும் நெடுக்குமாய் நடக்கும் மனைவியின் கொலுசு"இப்படித்
தொடங்கி" காதலில் ஜெயித்தவர்கள்
காதலை இழக்கிறார்கள்" என முடிப்பது அவர் ஸ்டைல்..
மறுநாள் காலை..
சுபாவிற்கு கால் பண்ணி'காரணம் கேட்காத; 1000ரூபா வேணும் உடனே' என்ற போது திவ்யாவை
சந்திக்க ஊருக்குச்செல்ல முடிவெடுத்திருந்தேன் "வாங்கிக்கோ" என்றதைத் தவிர வேறு எதுவும் சொல்லல சுபா..
நெல்லை செல்லும் பேருந்தில்
பயணப்பட்டேன். நான் வருவதை
மட்டும் திவ்யாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு ; உன்கிட்ட சர்ப்ரைஸா ஒரு விஷயம் சொல்லனும், நாம வெளில எங்கேயாவது மீட் பண்ணலாமா? எனக்கேட்ட போது, அவளும் அதையே விரும்பினாற் போல்..
"சரிப்பா; பஸ் டாண்ட் பக்கத்துல
இருக்கிற நளாஸ் கஃபே க்கு வா :)"
என்று பதிலனுப்பியிருந்தாள்..
நளாஸ் கஃபே..
"ஹேய் பிரபா. வாட் எ சர்ப்ரைஸ்
என்ன திடீர்னு எங்க ஊர்ப்பக்கம்?
வா வா " என. அழைத்துப்போய் ஓரமாக ஓர் இருக்கையிலமர்ந்து
என் ஃபேவ்ரிட் ப்ளேஸ் பா இது"
என்றவளின் முகத்தைப்பார்த்து
பேச்சிழந்துபோனேன்." என்னா எனர்ஜிடா , இவளுக்காக உயிர
கொடுக்கலாம் னு தோணிச்சு..
பரஸ்பர விசாரித்தல் முடியும்
தருவாயில் " நீ ஏதோ முக்கியமான
விஷயம் சொல்லனும் னு சொன்ன;
என்ன பிரபா? என்று கேட்டவாறே
நானும் ஒரு விஷயம் சொல்லனும்"்
என்றபடி யாரையோ எதிர்பார்த்து
தவித்துக்கொண்டிருந்த அவள் கண்களை மறக்க முடியுமா?
காஃபியை ஆர்டர் செய்துவிட்டு
நடப்பான விஷயங்களைப் பேசிக்
கொண்டிருக்கையில், "பிரபா
நான் செல்வா னு ஒருத்தர லவ் பண்றேன்; அவர் இப்போ இங்கே
வரேன் னு சொல்லிருக்கார்;
என் பெஸ்ட் ப்ரண்ட் நீ தான்;
அவர உனக்கு அறிமுகப்படுத்தப்
போறேன்" சொன்ன அடுத்த நிமிஷம் " துள்ளாத மனமும் துள்ளும் படத்துல பாத்ரூம்ல விஜய் அழுவாப்ல யே அந்த சீன் என் கண்முன்ன ஓடிச்சு. " டரியலாகி கண்ணீரை அடக்க முற்பட்டுக்கொண்டிருந்த போது
"ஹாய் ஹைய்ஸ் ஸாரி கொஞ்சம்லேட் ஆகிட்டு" என்று சிரித்த படி அமர்ந்தான்.. சைக்கிள் கேப் ல என் லைப்ல ஹம்மர் கார் ஓட்டின செல்வா.!! ரொம்ப நாள் பழகினது போலஅவன் பேசிச்சிரித்த
ஒவ்வொரு நொடியும் " அவன எட்டி அறையலாம் போல தோணிச்சு".. அங்கிருக்க மனமின்றி
முக்கியமான ஒரு வேலை இருக்கு
நண்பா; இன்னொரு முறை மீட் பண்ணலாம்; திவ்யாவிடம் மட்டும்
ஸாரி சொல்லிவிட்டு கிளம்பினேன்.
பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலிருந்த பங்க் கடைல தம் வாங்கி பற்ற வைத்த போது,"டேய் எங்கிருக்க?
அம்மா மெடிஸின்ஸ் வாங்கச் சொன்னாங்கடா, ப்ளீஸ் வரமுடியுமா?" சுபாவிடமிருந்து
ஃபோன் கால். " நான் உன் வீட்டு வேலைக்காரனா?கட் பண்ணு"
திவ்யா மீதிருந்த கோபத்தை சுபா
மீது காட்ட," நாயே ப்ரேக் பிடிக்காத
பஸ்ல அடிபட்டு சாகப்போறடா" வென சாபமிட்டு கட் செய்தாள்.
உதய்க்கு கால் பண்ணி "பல்ப் வாங்கியாச்சு தல; சரக்கடிக்கனும்
ரெடியா இரு; என்றேன் விசும்பலுடன்." sorry "என மெசேஜ்
அனுப்ப மனதிருந்தும் அனுப்பவில்லை சுபாவிற்கு..
சரக்கு,சகல பரிவாரங்களோடு காத்திருந்த உதய்யின் கைகளைப்
பற்ற ' கச்சேரி ஆரம்பம்.. போதை
தலைக்கேறி, அவர் தோளில் சாய்ந்தழுதேன்.." பசங்களோட
ப்ராக்டிக்கல் லைஃப் எப்போ ஸ்டார்ட் ஆகும் னு தெரியுமா? ஒரு பொண்ண லவ் பண்றப்போ கூட இல்ல; அவ பேசிப்பழகுறத
லவ் னு நினைச்சு பல்ப் வாங்குறப்போ தான்டா" என்றார் அவர் ஸ்டைல் அட்வைஸில்..
ம்ம்.. ஒரு வழியா ப்ளாஷ் பேக் முடிஞ்சது.. வெய்ட்,வெய்ட்
சின்னதா ஒரு ட்விஸ்ட் இருக்கு..
மறுநாள் காலை.. சுபாவுக்கு
கால் பண்ணி" ப்ளீஸ், ஸாரி.. பேசாம
இருக்காத" என்றேன்.. "இன்னும் நீ சாகலயாடா?" வென சிரித்தவளிடம்
ஐ லைக் யூ சொன்னேன்.. கொஞ்சலாய் " ஐ கில் யூ டா"
என்றாள்...
மூழ்காத ஷிப் ப்ரண்ட் ஷிப் தான்...
- பாலா.
அருமை :))
பதிலளிநீக்கு