தென் மாவட்ட தமிழர்களையும் ,தமிழ் சினிமாவையும் பிரித்துப்
பார்த்தால் பொருள் தர மாட்டார்கள்..
அவ்வளவு நெருக்கம் சினிமா..!
இன்றளவிலும் பிறந்த தேதியை ஏதேனும் ஓர் திரைப்படம் வெளியான தேதியோடு ஒப்பிட்டுச்
சொல்வதில் அலாதி பிரியம் ..
இணையதளங்களிலும் பிடித்த நடிகர்களுக்கான ஃபேன்ஸ் க்ளப்
அதன்மூலம் நட்பைக்கொண்டாடும்
தமிழக சினிமா ரசிகர்களின் பேரன்பை எளிதில் கடக்க முடிவதில்லை..
பிடித்த நடிகரின் படமென்றால்
ஓபனிங் ஷோவில் அதிரி,புதிரி
பண்ணுவதில் தொடங்கி..
'இன்று இப்படம் கடைசி'போஸ்டர்
ஒட்டப்பட்டும் நாள் வரை பார்த்து
ரசிக்கும் நேசத்திற்கு அளவே இல்லை என்பது மறுக்கவியலா உண்மை..
மதுரை,விருதுநகர் மாவட்ட சினிமா ரசிகர்கள் பிரியத்தை இன்றும் பார்க்க முடிகிறது..
'கடவுள் முரளிவாழ்க'எனும்
வார்த்தைகளேந்திய சுவரொட்டியை சிறுவயதிலேயே
செல்லூர் பாலத்தில் பார்த்த நியாபகம் இன்னும் மனதில்..
எம்ஜிஆர்,சிவாஜி,ரஜினி ,கமல்
தொடங்கி ,பிரபு,கார்த்திக்,விஜயகாந்த்,ராமராஜன், அஜித்,விஜய்,சிம்பு,தனுஷ் என நீளும்
ரசிகர் மன்றங்களை எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பார்த்து வளர்ந்த நான் மட்டும் விதிவிலக்கா
என்ன?
90 களின் தொடக்கம்.. பள்ளி செல்லும் வயது.. நான் படித்த
பள்ளிக்கூடத்தின் தெரு முனையில்
'தமிழ்மணி டாக்கீஸ்'.. ஆசிரியைகளுக்கு எடுபிடி வேலைபார்க்கும் பையன்களில்
நானும் ஒருவன்.. காலை 11 மணிக்கு டீ வாங்கச்செல்வது
வழக்கம்.. தியேட்டருக்கு எதிரே
இருக்கும் டீக்கடை டீ குடிச்சாதான்
எங்க டீச்சருக்கு தெம்பே வரும்..
(அது சரி,எங்கள மாதிரி பயலுவள
கட்டி மேய்க்கிறதுனா சும்மாவா)
இன்றுமுதல் 'தேவர் மகன்' பசை பதம் உலராத போஸ்டரில் கிடா
மீசையுடன் சிவாஜியும்,பங்க்
ஹேர் ஸ்டைலுடன் கைகட்டி
நின்ற படி கமலும்..
இப்படித்தான் கமல் எனக்கு அறிமுகமானார்.. அன்று மாலைக்காட்சியே கமலை
தரிசிக்கும் வாய்ப்பு.. எதிர்
பார்க்காத இனிய விபத்து..
அப்பாவிற்கோ சிவாஜி படம் என்றால் கொள்ளை பிரியம்..
அம்மாவிற்கு பெயர் வைத்ததே
சிவாஜி நடித்த படத்தை பார்த்துதான் என அம்மத்தா
சொல்லும் இப்பொழுதும்..
படம் வெளியான நாளிலிருந்து
அப்பாவுடன் பல முறை,அம்மாவுடன் சில முறை,இருவருடன் சேர்ந்து இருமுறையென தேவர் மகனை
பார்த்த எண்ணிக்கை அன்றைய
என் வயதைவிட 8 முறை அதிகம்..
அறிமுகங்கள் பரிட்சையமாவது அளவுகடந்த ஈர்ப்பில் தானே..?
அடுத்தடுத்து குணா,மகாநதி,மகராசன், இப்படித்தான் கமல் படங்கள் என்னில்
பரிட்சியமாகி மனச்சிம்மாசனத்தில்
கிடாமீசையுடன் கமல் அமர்ந்தது..
மீசையரும்பி,ஆசைதுளிர்த்து எதிர்பால் ஈர்ப்பை காதலென்று
பிதற்றித்திரிந்த வயதில் என் பார்வையில் காதல்மன்னன்களாகத் தெரிந்த இருவர் கமல், அஜித்..!
இன்றைய மனநிலையில் அனைத்து
நடிகர்களின் படங்களையும் பார்த்து
நன்றெனச் சொல்லுமளவு பக்குவப்பட்டாலும் 'விஸ்வரூபம்-2' ஓப்பனிங் ஷோ
பார்த்தே ஆகவேண்டுமென்ற
சிறுபிள்ளைத்தன ரசிப்புத்தன்மை
குறையவே இல்லை..
பயணத்தின் போது பின்னோக்கி ஓடும் மரங்களைப்போல, என்
நினைவுகளின் பின்னோக்கிய
பயணத்தில் சாலையாகவும்
சக்கரமாகவும் இருந்த,இருக்கும்
கமலுக்கு நன்றி....
ஏனென்றால் உன் பிறந்த நாள்..
(இன்று) - பாலா.
்
்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக