வியாழன், 14 நவம்பர், 2013

என்ன பெயர் வைப்பது!?

அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல்
அரிது; அதில் கொடிது கொடிது
ஆணாய்ப்பிறத்தல் மிகக்கொடிது...

சேலைத்தலைப்பில் முகமழுத்தி
நினைத்த நொடியில் அழுதுவிடும்
பெண்கள் அதிபாக்யவதிகள்..
காலங்காலமாய் கண்ணீரையும்,
பாசத்தையும் கோபத்தில் வெளிப்படுத்தும் ஆண்கள்
அபாக்யவான்கள்..
உணர்வுகளை உள்ளடக்கி மரத்துப்போய்,சிரிப்பை மறந்த சிடுமூஞ்சி ஆண்களின் உள்மனது
மட்டும் குழந்தைமாதிரி..

"பெத்த ஆத்தா செத்துக்கெடக்கா;
ஒருபொட்டு கண்ணீரு விடாம
நிக்கிறியே,நீ மனுசனா? கல்லா?
எனும் சாவுவீட்டு ஒப்பாரியில்
தொடங்கி, " கொள்ளி வெய்ச்சாச்சுல,திரும்பிப்பாக்காம போ சாமி" எனும் வெட்டியானின்
இறுதி வார்த்தையில் அடங்கி,ஒடுங்குகிறது..ஆண்களின் உன்னத உணர்வுகள்!!

ஒட்டுமொத்த ஆண்களையும் கல்நெஞ்சக்காரர்களென வசைபாடும் சில பெண்ணியவாதிகளும் தன் அப்பனிடம் உணர்ந்திருப்பார்கள். அந்த மனதின்ஊற்றில் சுரக்கும் அன்பின் துளிகள்
தன்னைச்சார்ந்து வாழும் ஜீவன்களுக்கானதென்பதை!!

பெண்களின் கண்ணீரில் ஆண்களுக்கான மன்னிப்பும் சேர்ந்தே; ஆண்களின் கண்ணீரில்??
கேள்விதான் பதிலும்.. இப்படி
எல்லோர் வாழ்விலும் கேள்வியாகவும்,பதிலாகவும்
வாழும் ஓர் ஆணுக்கு' அப்பன்'
எனப்பெயர் வைத்திருக்கிறது
சூழலும்,காலமும்..!!

பெண்பிள்ளைகளுக்கு அப்பன்கள்
நண்பானாக இருப்பதில் ஆச்சர்யமில்லை,ஆண்பிள்ளைகளுக்கு அப்பன்கள் நண்பனாக இருப்பதில் ஆச்சர்யத்தை
தவிர வேறொன்றுமில்லை..

தாமரைஇலை,தண்ணீர் போல் ஒட்டி,ஒட்டாத எனக்கும் என்அப்பனுக்குமான உறவுக்கு
என்ன பெயர் வைப்பது??

இன்றைய நிலவரப்படி நதி,கரையென சேர்ந்தே பிரிந்து வாழ்கிறார்கள் அம்மாவும் அப்பாவும்; விவரம் தெரிந்த
நாள்தொட்டு,அம்மாவிடம்
மட்டுமே அடிவாங்கும் வாடிக்கையான வேடிக்கை இன்றளவும் என்னில் தொடர்கிறது.
சொல்லிக்கொள்வதற்கென
ஒருசம்பவமும் இல்லை அப்பன்
என்னை அடித்ததற்கடையாளமாய்.
திட்டுவாங்கியதும் இல்லை.பள்ளிவயதில் அப்பன் தோளிலமர்ந்து அதிசயித்துப்பார்த்த
திருவிழாக்கள் இன்னும் மனதின்
ஆழத்தில் குறுக்கும் நெடுக்குமாய்
ஓடிக்கொண்டுதானிருக்கிறது..
சீருடையணிந்தபடி..!!!

எல்லோரும் நல்லவர்களே ; சூழ்நிலை அவர்களின் முகத்திரையை கிழிக்காத வரையில்.
என் அப்பனும் நல்லவன்தான்..
10வது படித்துமுடிக்க 11ஆண்டுகள் படையெடுத்து
வெற்றி உவகையில் திளைத்திருந்த
தருணம்,பாட்டனின் இறப்பும் அப்பனின் பிரிவும் சேர்ந்து என்தலையில் முட்கிரீடம் சூட்டி
உழைப்பிற்குள் தள்ளியது..
மூன்றாம் நபர்போல் எதிரெதிர் சந்திக்கநேர்கையில் பேசிக்கொள்கிற
எங்கள் அப்பன்,மகன் உறவிற்கு வயது 13. அப்பனின் அக்கறைகள்
யாவையும் அண்ணனிடமே உணர வாய்ப்பளித்த பிரிவிற்கு நன்றி சொல்வதில் உடன்பாடில்லை எனக்கு..

சமீபகாலமாக பேச்சளவிலும் தொலைந்து போன அப்பன் ,மகன்
பாசத்தை தேட முற்படவில்லை
நானும்,என் அப்பனும் நிச்சயமாக
தேடியிருக்கமாட்டார். மானம்,ரோசம் ஊர்க்காரய்ங்க ரத்தத்தில்
ஊறிபபோன விஷயம் தானே?!!

ஓரிருநாட்களுக்குமுன் அப்பனைச்சந்திக்க நேருமென்று
எதிர்பார்க்காத ஒன்று..
அண்ணனுக்கு பையன் பிறந்த
விஷயத்தை சொல்லி மௌனமாய்
நின்ற நொடி,என் அப்பனின் கண்களில் கசிந்த கண்ணீருக்கு
என்ன பெயர் வைப்பது??

இன்று அப்பனின்பிறந்த நாள்
பல தருணங்களில் அப்பானாக அக்கறையும் அன்பும் காட்டிய என் அண்ணனுக்கும் பிறந்தநாள்!

இருவரையும் வாழ்த்தி வணங்குவதில் தவறென்ன
இருக்கிறது?! இந்த நிமிடம்
என்மனதினுள் கரைமோதுகிற அலைகளாக .. நா.முத்துக்குமாரின்
உணர்வான இந்த வரிகள்...

" இளமையான அப்பாவின் புகைப்படம் ஞாபகப்படுத்துகிறது
என் பால்யத்தை " 
    
                            - பாலா.

  
  
                 

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக