ஞாயிறு, 3 நவம்பர், 2013

புழு.

மெல்ல மெல்ல ஊர்ந்து
நகர்ந்து,உன் மனக்கிளைதனில்
சரணடைந்தேன் சிறு புழுவென..

உனதன்பின் இலைகள் புசித்து
வயிறு பெருத்து,அவ்விலைகளின்
நிழலிலேயே வசித்துக் கொண்டிருந்தேன்..

அவ்வபோது உன் கிளையில் வந்தமரும் ஊடல் பறவையின்
கூரலகு கொத்தித் தின்னாமலிருக்க
கிளையிடுக்கில் ஒளிந்து கொள்வதென் வழக்கம்..

சிறு சிறு தென்றலின் உரசல்களில்
உன் கிளையசைய, பிடி விலகி
வீழ்ந்து, பெரும் சிராய்ப்புகளோடு
மீண்டும் கிளை பற்றி ஆசுவாசமானேன்..

அடர் அரவம் சூழ்ந்த ஓர் அந்திமப்
பொழுதில்,ஆழிப்பேரலையொன்று
உன் மனதின் ஆதிவேர் வரை
அசைத்து,தன்னுள் மூழ்கச்
சொல்லியது முழுதும்..

நீயே மூழ்கிய பின்,உன் கிளையில்
வாழும் நான் மூழ்காமலா இருந்திருப்பேன்..? மூழ்கிய
நான் மூர்ச்சையுறவில்லை
கிளை கைவிட்டாலும் உனதன்பின்
ஓரிலை கைவிட வில்லை என்னை..

அப்பேரலையில்  மிதந்து வந்த
தக்கையொன்று,மயங்கிக்கிடந்த
என்னை தன் மீதேற்றி கரை
சேர்க்க யத்தனித்துக்கொண்டே..

                     - பாலா.

1 கருத்து:

  1. Wow!. அருமை. படிக்கும்போதே கற்பனை செய்ய முடிந்தது. தொடர்ந்து (கவிதை) எழுதுங்கள்! :-)

    பதிலளிநீக்கு