எளிமையான வாழ்வியலின் பயணத்தில் அன்பின் விரல் பிடித்து நடக்கும் சாதாரணனின் பதிவுகள்
செவ்வாய், 1 ஜூலை, 2014
ஆமென்..
கைக்கெட்டிய கிளையிலிருந்து ஓரிலையை
கிள்ளிப்பறிப்பதற்கும்,அவ்விலை கொஞ்சம் கொஞ்சமாக உயிர்
துறந்து சருகாகி உதிர்வதற்கும் என்ன வித்தியாசம்?எனக்குள் கேள்வியெழுப்பி என் விரல்கள் கொய்த புங்கையிலையின் ஜீவனிடம் மானசீகமாக மன்னிப்புக்கோரி வெறித்த
பார்வையுடன் நின்று கொண்டிருந்த இடம் திருநெல்வேலி ஜங்சன் எதிரில் உள்ள இளநீர்க்கடையில்.அடுக்கி
வைத்த செங்கற்களின் இடுக்கிலிருந்து சாரை சாரையாய் ஊர்ந்து வரும் கடியெறும்புகளைப்போல மனிதக்கூட்டம் ஜங்சனிலிருந்து வந்தபடியே
இருந்தது,இளநீர்க்கொத்தில்
செருகி வைக்கப்பட்டிருந்த
வெட்டரிவாள் குலதெய்வம்
சிலை கையில் வைத்திருக்கும் அழகை கவிழ்த்துப்போட்டபடி கவிந்திருந்த அழகு,ஒற்றை
நொடியில் மாமன் மடியில்
அமர்ந்து காதுகுத்திய வைபவத்தை மனத்திரையில்ஓட்டிக் கொண்டிருந்தது.இளநீரின் விலைகேட்டு,பேரம் பேசி வாங்கி,ஒரே மூச்சில் சட்டையெல்லாம் சிந்தியவாறு குடித்து,இடப்புறங்கைய்யால் உதடு
துடைத்து,வலக்கையிலிருந்த இளநீர்க்
கூட்டை பவ்யமாக கீழே கிடத்திய கணம்,நீலநிறச்
சல்வார் அணிந்த பெண்ணொருத்தி அலைபேசிக்கொண்டே நடந்து கடந்து கொண்டிருந்தாள்,காலை சிற்றுண்டி முடித்துவிட்டு இருட்டுகடையையொட்டி
அமைந்திருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் வாசலில் நின்ற
பொழுது,கடந்த அதே உருவம்,அதே நடை,உடை.பின்னிருந்துபார்த்த அவளின்
அன்ன நடையழகு அஸ்வதியை நினைவில் கதம்பமாக தள்ளித்தள்ளி கோர்த்துக்கொண்டிருந்தது.
இன்று எனக்குள் ஏன் இந்த நியாபக சக்தி ஊற்றைப்போல் கசிந்து
கொண்டிருக்கிறது?நியாபகவிழிகள் சிந்தும் முதல் துளி
மறதி,அடுத்தடுத்த துளிகள்
தான் கண்ணீரும் புன்னகையுமா?என்னில் விழித்த கேள்வியின் நாயகன்
மூக்குக்கண்ணாடி முனையிலமர்த்து கெக்கலித்துக் கொண்டிருந்தான்..
"பார்த்த இடத்திலெல்லாம்
உன்போல் பாவை தெரியுதடி"என எங்கிருந்தோ
காற்றில் தவழ்ந்து வந்த பாடல்,மதுரை வீதிகளில் அஸ்வதியின் கரம்பற்றி நடந்த காட்சியினை கறுப்பு வெள்ளையாக மறுஒளிபரப்பியபோது,தன் வீட்டை தன் முதுகில் சுமந்து நகரும் நத்தைபோல்
புத்தகமூட்டையை முதுகில் சுமந்து கூன் விழுந்த கிழவியொருத்தியின்
தள்ளாட்ட நடையை பாதங்களில் ஏந்திய குழந்தையின் பின் நடக்க ஆயத்தமானேன்.நான் நகர்ந்தநொடியின் விரல்களைப்பற்றி,நகரவிடாமல் இடைமறித்தது ," இளநி எவ்ளோ ப்பா ?"என்ற பெண் குரல், நன்கு பரிட்சயமான குரல்.
சமீபகாலமாக கேட்காமல் நியாபகத்தில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கிற குரல்.குழந்தையின் பின் நடப்பதை மறந்து அக்குரலின் மீது குவிந்ததென் மொத்த கவனமும்..
நிறைய பேர் உடனிருக்கையில் அருகிலிருப்பவர்களை மறந்துவிடும் அளவு கவனக்குறைவாக இருக்கப்
பழகிய மனது,யாரும் இல்லாத போதுதான் பழைய நினைவுகளைக் கிளறத்துவங்குகிறது,அந்த கிளறலில் மீண்டும் எழுகின்றன பழைய முகங்கள்,பழைய குரல்கள்.
அப்படியொரு பழைய குரல்தான் நான் இப்போது கேட்ட குரல்,குரல் கேட்ட திசை நோக்கி பார்வைஎறிந்தேன்.என் ஊர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல்
வகுப்பெடுத்த சாந்தமேரி டீச்சரின் குரலும் வயதேறிய தோற்றமும்,மாறாத அதே முகவெட்டும் டீச்சர்தான் என்று உறுதிசெய்தது.அருகில் சென்று "நீங்க சாந்தா டீச்சர்தானே?"தயக்கத்துடன் வினாவினேன்."ஆமாம் தம்பி
நீங்க?"கேள்வியோடு குழம்பி
நின்ற டீச்சரின் கண்களில் நான் யாராகஇருக்குமென்ற
துடிப்பு படபடத்திருந்தது.என் அம்மாச்சியின் பெயரைச்
சொல்லி டீச்சரின் மாணவன்
என்பதைச்சொன்ன பிறகும் என்னைப்பற்றிய நினைவு
ஈரம் படர்ந்த நூல்கயிற்றில்
விழுந்த முடிச்சை அவிழ்க்க
சிரமப்படும் அவஸ்தையை
டீச்சருக்கும் உணர்த்திய கணம்,"வலக்கையிலும்,இடக்கையிலும் எழுதக்கற்றுத்தந்து எழுத்தறிவித்த இறைவி
சாந்தா டீச்சர்"இந்த வரி உங்களுக்கு மறந்திடுச்சா
? மறுமுறையும் கேள்வியாக தொடர்ந்தேன்,
"ஏய்,ஏய் நீ அந்த தி.திருக்குமரனா டே,??"அதே திருக்குமரன் தான் நான்.
நீ இங்க என்னடே பண்ணுத?
மதுரைப் பேச்சு வழக்கிலிருந்து நெல்லைப் பேச்சுவழக்கிற்கு இடம்பெயர்ந்திருந்த டீச்சரின் பவுடர் கலந்த வியர்வை வாசனை மதுரையிலிருந்து இன்றளவிலும் இடம்பெயரவேயில்லை.அதுஅன்பின் வாசம் ,டீச்சருக்கென்ற அடையாள வாசம் மாறவே
மாறாது.எனக்குள்ளே யோசித்து,"சும்மா ஒரு ட்ரிப் ஊர்சுத்தல்"என பதில்
சொல்லி "நீங்க எப்போ நெல்லை வந்தீங்க? புன்னகையுடன் நான் தொடர,"மூத்தவள மதுரைல கட்டிக்கொடுத்தாச்சுலா;எளையவள இங்க இரவணசமுத்திரத்துல கட்டிக்கொடுத்திருக்கு.அதாம்ல அங்கையும் இங்கையுமா இருக்கேன்"ஒரே மூச்சில் இருமகள்களின் வாழ்வையும் சொல்லி முடித்த பெருமிதமும்,அங்கிங்குமாக அல்லாடும் தாய்மையின் அலுப்பன்பும்
டீச்சரின் பேச்சில் அழகாய்த்
தென்பட்டது.திருநெல்வேலில ஒரு சின்ன ஜோலி அத முடிச்சிட்டு வாரேன் இப்போ.திரும்ப எளையவள பாக்க போவணும்.இளநீரை குடித்த உற்சாகம் டீச்சரின் பேச்சில் ஆசுவாசமாகியிருந்தது ."ரோஸ்லின்
ஞானமேரி தானே உங்க இளைய மகள் பேரு?"டீச்சரிடம் ஆர்வமாகக்கேட்க வைத்த அந்த உணர்விற்கு எந்த அகராதியிலாவது விளக்கம் பதிலாகஇருக்குமா?மீண்டும் கேள்வியின் நாயகன் எழுந்துவிட்டான்."ஆமாம்டே, இங்கன தான்
தென்காசி பக்கத்துல க்ளினிக்
வெச்சிருக்கு;அங்கதான் கிளம்பிட்டுஇருக்கேன்" 6/6/1991 ல் பயத்தோடு முதல் வகுப்பிற்கு புதிதாய்ச் சேர்ந்த நாளில் வாஞ்சையோடு வரவேற்ற அந்த புன்னகை டீச்சர் முகத்தில் மாறாமலே அப்பிக்கிடந்தது,இப்போதும்.
"நானும் உங்களோட வரலாமாடீச்சர்"? 'இதென்னடே கேள்வி தாராளமா வரலாம்,'1ம் வகுப்புமுதல் 8ம்வகுப்புவரை ஒரு பள்ளியில் குறைந்த பட்சம்
வாரத்தில் 5நாட்கள் பார்த்துப்
பழகி பேசி மரியாதையுடன்
மனதிற்குள் நேசித்து,"ஆடுமாடுகள் போல் வாய்வழியே அம்மாவை அறிந்திருந்த பால்யவயதில் எழுத்தின் வாயிலாக அம்மாவை அறிமுகம் செய்த
குருவினுடன் பயணிக்க கிடைத்த வாய்ப்பை யார் தவறவிடுவார்கள்??"உடனே
கிளம்பிவிட்டேன்.நெல்லையிலிருந்து மதுரை வரை செல்லும் இரயிலில்.
மதிய வெயில்,மாலை வெயிலாய் தடம் புரண்டுகொண்டிருந்த நேரம்,இரயிலின் பாதச்சக்கரங்கள் சற்றே இளைப்பாற
நின்ற இடம் தென்காசி.குற்றாலத்தின் குளுமையைக் களவாடி தன் மீது போர்த்தியிருந்த தென்காசிக்கு நான் வருவது
இதுவே முதல்முறை.பெரியஅளவில்லாமலும்,சிறிய அளவில்லாமலும் நடுத்தரமான ஒரு அளவில்
அழகாக அமைந்திருந்தது தென்காசி ஜங்சன். ஜங்சனின்
வெளிப்புற வாசலில் ஈக்களாய் மொய்த்துக்கொண்டிருந்த ஆட்டோக்காரர்களில் ஒருவரைத்தேர்வு செய்து,இலஞ்சி செல்லும் பிரதானசாலையில் அமைந்திருக்கும் க்ளினிக் பெயரைச்சொல்லி ஆட்டோவிற்கான கட்டணம்
எவ்வளவு எனக்கேட்டு டீச்சரும் நானும் உட்கார்ந்த
போது,எதிர்ப்பட்ட சுவரில்
"வீரம்"பட போஸ்டரில் வெள்ளுடை வேந்தனாக நரைத்த தலையுடன் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தார் அஜித்.பரதன்dts,தினசரி 4காட்சிகள் என துண்டு போஸ்டர் தமன்னாவின் '0'சைஸ் இடையில் ஒட்டிஒட்டாமல் படபடத்துக்கொண்டிருந்தது.போஸ்டர் ஒட்டியிருந்த சுவற்றிற்கு குடைபிடித்து நின்ற தூங்குமூஞ்சி மரக்கிளையில் அக்காகுருவிகள் கூட்டமாக
கூடடைந்த மகிழ்வில் குலாவிக்கொண்டிருந்தன.பொதுவாக சித்திரைமாதங்களில்தான் அக்காகுருவிகள் ஊருக்குள்
திரிவதாக அம்மாச்சி சொன்னநியாபகம் வந்தது.
ஆட்டோ கிளம்ப கர்ஜித்த
நொடி மீண்டும் டீச்சரின் அருகாமையிலமர்ந்து பயணம் தொடர்ந்தது.ஒவ்வொரு ஊரின் அடையாளங்களைச் சுமந்து
நம்மை வரவேற்பது,ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான்போல,"பரணி சில்க்ஸ் A/C,உங்கள்
இராஜாமணி டெக்ஸ்டைல்ஸ்"
என ஆட்டோ செல்லும் வழியில் சுவர்விளம்பரங்கள்
தென்காசியின் அழகை மெருகேற்றியிருந்தன.க்ளினிக் வாசலில் நின்ற ஆட்டோவிற்கு பணம் கொடுக்க பர்ஸை எடுத்த என் கைகளை இறுகப்பிடித்தது டீச்சரின் கைகள்,விபத்தில் சிக்கி ICUவில் கிடந்து உயிரைக்கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைத்து மரணத்தில் தவறாகத் தேடிக்கொண்டிருந்த அஸ்வதியின் கைகள் கடைசியாகப்பற்றிய இறுக்கம் டீச்சரின் கைகளிலிருந்தது வியப்பேதான்."ஆத்ம நண்பர்களாயினும் அனுமதி
பெற்று உள்ளே வரவும்" என்றவாசகத்தை இரத்த நிறத்தில் தாங்கியிருந்த கதவைத்திறந்து அனுமதி
இல்லாமலே உள் நுழைந்தோம் நானும் டீச்சரும்."தே.ரோஸ்லின்
ஞானமேரி;உடற்கூறியல்/மனநல சிறப்பு மருத்துவர்"
என்று டேபிளில் வைக்கப்
பட்டிருந்த சிறு போர்டு பேப்பர் வெயிட்டாகவும்
வடிவமைக்கப்பட்டிருந்த
வேலைப்பாடு எனக்கு மிகவும் பித்திருந்தது."வாம்மா;எப்ப கிளம்புன?சார்
யாரு?"அழகி பட நந்திதாதாஸின் வெள்ளந்திச்சிரிப்பை கன்ன
எலும்புகள் மேலெழ,கண்களை இடுக்கி இடைவெளி விழாத பல்வரிசையில் அழகாக சிரித்தது டாக்டரின் முகம்.
"Iam குள்ளக்கத்திரிக்கா
From மதுரை;நீங்க ரோஸ்லின் மான ஞேரிதானே" தவறாக அந்தபெயரை உச்சரித்தும்
என்னுடைய பள்ளிக்கால
பட்டப்பெயரையும் சொல்லி
அறிமுகமாகினேன்."அடப்பாவி 5வது படிக்கும்
போதே 8வது படிச்ச புள்ள கிட்ட ஐலவ் யூ சொன்ன
ஆடுகாலி திருக்குமரனாடே
நீ?சந்தோஷமா இருக்கு;இவ்ளோ நாள் அப்புறம் மீட்
பண்றது.டைம் ஆகிட்டு,வா வீட்டுக்கு போகலாம்.போற வழியில பேசிக்கலாம்"உரிமையோடு வீட்டிற்கழைத்த டாக்டரின்
பண்பில் பிரமித்து நின்றேன்.
மாருதி ஸ்விப்ட் நீலநிறக்காரில் இப்போது
மீண்டும் டீச்சருடன் சிறுபயணம்.இம்முறை டீச்சரின் இளையமகள் டாக்டரும் உடனிருக்கிற
பாக்யமும் கிடைத்திருந்தது.
"அப்புறம்டே,வீட்ல எல்லாம்
எப்டி இருக்காங்க? அம்மா
அப்பா அம்மாச்சிலாம் சௌக்யந்தானே"? கியர் மாத்திய கையோடு பின்னிருக்கும் என்னிடம்
டாக்டர் கேள்வி கேட்க,"நீங்க
கேட்ட எல்லோருமே நல்லா
இருந்தாய்ங்க;இப்போ யாரும்
உயிரோடஇல்ல டாக்டர்" விரக்திச்சிரிப்போடு சொன்னேன்."எவ்வளவு சோகமான விசயத்தையும்
சிரிச்சிட்டே சொல்றதுதான்
பசங்களோட கெத்து" நீ மதுரக்கார பய சொல்லனுமாடே உம்ம ஊரு கெத்த? இந்த அப்ரோச்
எனக்குபிடிச்சிருக்கு. keep it up சொன்ன டாக்டருக்கு நன்றிசொன்னேன் புன்னகையால்."என்ன ஒர்க்
பண்ற?" நாய்பொழப்பு (சேல்ஸ் ரெஃப்களை உலகறியச்செய்யும் கொச்சைச்சொல்)டாக்டர்;
"ஓ..நாய் பிழைப்புனா நன்றியோட இருக்கிறது,
நல்ல தொழில்தான் பாக்க"டாக்டருக்கேயான
பாசிட்டிவ் அப்ரோச் அந்த
பதிலில் பதிவாகியது.பரஸ்பர விசயங்களை பேசிக்கொண்டே வந்ததில்
40நிமிடபயணம் ஓர் அழகியவீட்டு வாசலின்
முன் நிறைவடைந்தது.
அழைப்புமணியின் சுவிட்சை டாக்டரின் இடது
கை நடுவிரல் அழுத்த,உள்ளிருந்து வாரேன் என்ற
சப்தத்துடன் கதவை திறந்தான் அழகிய சிறுவன்.
டாக்டரின் மகனென்ற அடையாளம் அவனின் புன்னகையில்.hai மா,hai பாட்டி,hai..who r u?? என்னைப்பார்த்து அச்சிறுவன் கேட்டவுடன்,"hai am திருக்குமரன்;what is ur name?"பீட்டர் இங்கிலீஷ்தான் இப்போ தலைமுறை பொடியன்களுக்கும் கௌரவமாக இருக்கு தமிழனாடா நாமெல்லாம்?
ஷோல்டர உயர்த்தி எழுந்த
கேள்வியின்நாயகன் முதுகில் 2 அடி வைத்து
சிரித்து அச்சிறுவனின் பதிலுக்காக காத்திருந்த
குறுநிமிடங்களில்,விறுவிறுவென,"நத்தோலி
ஒரு செறிய மீன் அல்ல" மலையாளப்படத்தில் பஹத்பாசில் தனக்கென நடையில் ஓர் தனி ஸ்டைலுடன் லுங்கியை மடித்துக்கட்டி நடந்துவருவது போல் உள்ளிருந்து வந்தார் டாக்டரின் கணவர். டீச்சருக்கு ஸ்தோத்திரம் சொல்லி என்னையும் உள்ளே வரச்சொன்ன போது
"my name is ஜான்சன்"என்ற
அச்சிறுவனிடம்,நான் உங்கப்பா பேரக் கேட்கல;
உன் பேரச்சொல்லு,"வென்று
டாக்டரின் கணவரைப்பார்த்தேன். இந்தமொக்க ஜோக்குக்கு எம்புள்ள சிரிப்பான்னு எதிர்பார்க்காதடே,என்பது போலிருந்தது அவரின் முகம்.என்னைப்பற்றிய சகலவிசயங்களையும் தன் கணவரிடம் சொல்லிக்
கொண்டே சப்பாத்தியும்,மாங்காய்க்கூட்டும் தயார்
செய்து சாப்பிடச்சொன்ன
குடும்பத்தலைவியின் நேர்த்தியில் அசந்துபோனேன்.தன் கணவரும் ஒரு டாக்டரென்ற
செய்தியை பேச்சினிடையே
வெகுஇயல்பாகச் சொன்ன
டாக்டரின் எதார்த்தங்களை
புத்தகமாகவே எழுதலாம்.
சாப்பிட்டு சிறிதுநேரம் பேசிச்சிரித்து கிளம்பத் தயாரானபோது மணி இரவு
9ஐத்தொட நிமிட முள்ளில்
ஓடிக்கொண்டிருந்து. டீச்சரிடமும்,டாக்டரிடமும்
அவர் கணவரிடமும் நன்றி
சொல்லிவிட்டு கண்களை அருகிருந்த ஸோபாவில் உறங்கிக்கொண்டிருந்த ஜான்சனின் கலைந்த கேசத்தின் மீது பதித்தேன்.
களைந்த கேசத்தின் அழகை
கைகளால் வருடி காதோரம்
நான் bye சொல்ல,உறக்கத்திலே
bye uncle என்றான் ஜான்.
வாசல் வரை அமைதியாக
உடன்வந்து வழியனுப்பிய
டாக்டர் நான் செருப்பணிந்த
குறுகிய நொடிகளில்,"அடுத்து என்ன பண்றதா உத்தேசம் தற்கொலைதானடே?"அந்த
கேள்வியில் இருந்த உண்மையின் பிரமிப்பு அதிர்ச்சியாய் உறைந்தது
என்னில்."எப்டிக்கா,என் மனசுக்கு மட்டும் தெரிஞ்ச
ரகசியம் உங்களுக்கு தெரியவந்தது"ஆச்சரியமாக
கேட்டேன். நோயாளியோட
வாய் சில நேரம் பொய் பேசும்,ஆனா கண்கள் பொய்
பேசாது;கண்ணப்பார்த்து
மனச படிச்சாதான் மருத்துவரா இருக்க முடியும்,சொல்லு என்ன ப்ராப்ளம் உனக்கு??இந்த அதிர்ச்சியில் டாக்டரை அக்காவென நான் அழைத்ததும் ஆச்சர்யமே.
கனத்த மௌனம் விண்கல்லாக எங்களிருவரினிடையே பெரும் கூச்சலுடன் விழ,
லேசான விசும்பலுடன்
அஸ்வதியின் பெயரை உச்சரித்தேன்."என்ன லவ்வா?" டாக்டரின் மென்குரல் ஆறுதலாய் ஒலித்தது." இதுவும் ஒருவித
லவ்தான்;மேரேஜ்க்கு அப்புறமா வந்த லவ்.அம்மா,அப்பா இறந்தபிறகு மாமாவோட வற்புறுத்தலால் அஸ்வதிய கட்டிக்கிட்டேன்.bsc ஃபைனல் இயர் படிச்சிட்டு இருந்தா.முதல்ல 5மாசம் அவளுக்கும் எனக்கும் புரிதல் சரியா ட்யூன் ஆகாம முட்டல் மோதல்தான்
அவளே என்ன புரிஞ்சு நடக்க ஆரம்பிச்சது பெரிய மேஜிக்;முன்கோபம் இல்லைனா நீ ரொம்ப நல்லவன் னு சொல்லி சிரிப்பா. போன மாசம் ஒரு விபத்துல இறந்துட்டா; நான்
ரொம்ப நேசிச்ச எல்லோரும்
சீக்கிரமே என்னைவிட்டு திரும்ப வரமுடியாத தூரம்
போய்ட்டாங்க.அதான் நானும் அந்த தூரத்துக்கே
போய்டலாம் னு ஊரவிட்டு
கிளம்பிட்டேன்,4நாளாக இங்கதான் சுத்திட்டுஇருக்கேன்" விசும்பல் கண்ணீராக திரிந்து வழியமுனைகையில்
என் இதழ்கள் பேச்சை நிறுத்தியது.sorry ,cool cool பெரிய இழப்புதான்.யாராலும் நிரப்ப முடியாத இழப்புதான்.நாம நேசிச்சவங்க உயிரோட இல்லே னா நாமளும் உயிர
விடனும் னு நினைக்கிறது
முட்டாள்தனம்;யார் இல்லாம
இருந்தாலும் தனியா வாழ கத்துக்கணும்.உன்னோட தேவை கொஞ்சம் அன்பும்;
நிறைய நம்பிக்கையும் தான்
அன்புகாட்ட நிறைய பேர் இருக்காங்க,நம்பிக்கை நீயே
வரவைச்சிக்கனும்டே,டாக்டரா பேசல,ஒரு சக மனுஷியா சொல்றேன்
வாழ முயற்சிஎடு;சாக முயற்சி எடுக்காத ப்ளீஸ்"கெஞ்சலுடன் பேசி
முடித்த டாக்டரின் கைகளை
பற்றியழத்தோன்றியது. வாசல் கேட்முன் புங்கம்பூக்கள் உதிர்ந்துகிடக்க,நிலவொளியில் மினுமினுத்த புங்கையிலையின் நிழல்கள்
பூக்களை ஆறத்தழுவிக்கொண்டிருந்த
நிமிடத்தில்,"ஒரு நிமிஷம்
வெயிட் பண்ணு;வாரேன்"என வீட்டினுள் இருந்த பைபிளோடு திரும்பி
வந்த டாக்டர்,"இதப்படி னு
சொல்லமாட்டேன்; இத உன்னோட நம்பிக்கையின்
அடையாளமா நினைச்சு
வாங்கிக்கோ" நீயும் என்
கூடப்பிறந்தவன் மாதிரிதான்
புதுவாழ்க்கைய தொடங்கு
போ "மாறாத புன்னகையோடு பைபிளை
நீட்டியது டாக்டரான ஒரு
உடன்பிறவாத சகோதரி.
அன்பின் சுமையைவிட,
கருணையின் சுமையைவிட,
கர்த்தன் ஏந்திய சிலுவையின்
சுமையைவிட கனத்தது, அந்த பைபிளின் சுமை. மீண்டும் சாகாமல் வாழச்
சொல்கிற நம்பிக்கையின்
சுமை அதிகமாகவே கனக்கத்தான் செய்தது.தீர்க்கமாக டாக்டரிடம் சொன்னேன்,என் அலைபேசி
எண்ணைக் கொடுத்து,"இப்போ இல்ல;உங்களுக்கு
எப்போ தோணுமோ அப்போ
ஒரு கால் பண்ணுங்க" என்
மரணம் இயற்கையாக நிகழ்ந்திருந்தா மட்டும் தான்
நான் இல்லை னு அர்த்தமாகும்"என்று.
'வெரிகுட்,கண்டிப்பா ஒருநாள்
பேசுவேன்.நம்பு,நம்பிக்கைதான் எல்லாமே,
போய்ட்டு வாடே'பாந்தமான
வார்த்தைகளோடே டாக்டர்
நான் கிளம்பும் வரை வாசலில் நிற்க,"ஞானம் போதிமரத்தடியில் மட்டுமில்ல; புங்கைமரத்தடியிலும் கிடைக்கும்"என நிரூபிச்சிட்டீங்க அக்கா என்றேன்."போடே குள்ளக்கத்திரிக்கா" பொய்க்
கோபம் கொண்டு சிரித்து
என்னை அனுப்பி வைத்தது டாக்டரின்
அழகான கண்டிப்பு...
சிலமாதங்களுக்குப்பிறகு...
"உலகினில் மிக உயரம்,
மனிதனின் சிறுஇதயம்"
விஜய் ஆண்டனியின் குரல்என் அலைபேசி அழைப்பிசையாய் ஒலித்தது.
"ஹலோ திரு சார் இருக்காங்களா?" எதிர் முனையில்...
"சொல்லுங்க;நான் திரு
தான் பேசுறேன்" என் பதில்..
"டேய்,குள்ளக்கத்திரிக்கா,
இன்னும் உயிரோடதான்
இருக்கியா?நான் டாக்டர்
ரோஸ்லின் ஞான மேரி பேசுதேன்,"அலைபேசியிலும் மாறாத
புன்னகையின் ஒலி"? கேள்வியோடு ,அக்கா எப்டி
இருக்கீங்க" என்றேன்.
"அக்காவ பார்க்க மதுரை
வந்திருக்கேன்,நீயும் வாயேன் அக்கா வீட்டுக்கு.அட்ரஸ மெசேஜ் பண்றேன்
மறக்காம வந்து சேருடே"டாக்டரின் அன்பில்
கலங்கிய என் விழிகளைத்
துடைக்க மனம் வராமல்
ஆனந்தமாக அழுதபடி நேதாஜி சாலையோர டீக்கடை வாசலில் நின்ற
போது,"பூஜ்ஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு
கிழி,அதுக்கு மதிப்பு கூடுமடா" நம்பிக்கை ஊட்டும் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் கொஞ்சல் மொழியில் பாடிக்கொண்டிருந்தார்,டீக்கடை ஸ்பீக்கரில்.. "ஆமென்" (முற்றும்)
- பாலா.
்
்
்
ote from Royal Bird
http://bit.ly/Notepad_Pro
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக