திங்கள், 9 பிப்ரவரி, 2015

சல்யூட் சினிமா

"வெல்டன் தனுஷ்" இந்த வார்த்தை மட்டும் பாராட்டுவதற்கு போதுமானதாக இருக்கவே முடியாது.கட்டியணைத்து முத்தமிட்டு உச்சி நுகர நினைத்தால், உச்சி நுகரவே முடியாத உயரத்தில் அமிதாப் நிற்கிறார்.இருவரையும் தவிர்த்து படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்ட நினைத்தால் 1000 படங்களுக்கு இசையமைத்து,"எப்பவும் நான் ராஜா" வென நிற்கிறார் நம் இளையராஜா. ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமோ காட்சிக்கு காட்சி அழகியலை நேர்த்தியாக வார்த்து,கோர்த்து இது என்சினிமா என்பது போலொரு முனைப்பை கேமிராவில் செதுக்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் "ஒருபடி மேல் நான் தான்" என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பால்கி. கிரியேட்டிவ் இயக்குநருக்கு கூடவே பிறந்த பிறப்பு போல. கைதட்டல்கள்தான் கலைக்கும்,கலைஞர்களுக்குமான வெகுமதி. அதற்காக கைகள் சிவக்கும் அளவா கைதட்டல்கள் வாங்குவது? வாங்கிவிட்டதே "ஷமிதாப்"!! இது legends சினிமா. இந்த legends வரிசையில் நடிப்பின் அனுபவ முதிர்வை முன்வைத்து தனக்கான இடத்தை தக்க வைத்திருக்கிறார் தனுஷ். இனி இந்திய சினிமா இவருக்கு இனிமா கொடுக்க வாய்ப்பே இல்லை.. நிறைய அசாத்தியங்கள் ஷமிதாப்பில் சாத்தியங்களாகியிருக்கின்றன அதில் சில... 1. திரைக்கு முன்னால் மட்டும் தான் தனுஷ், அமிதாப் இருவரின் ஈகோ. திரைக்கு பின்னால் அப்படி ஒன்றும் இல்லை என்பது போல நிறைய காட்சிகள். தனுஷிடம் அமிதாப் அடிவாங்குவதோடு நின்றுவிடாமல் வோறொரு காட்சியில் அவரோடு கட்டி உருண்டு புரண்டு சண்டையிடும் அளவு இறங்கி அ(ந)டித்திருப்பது ஆஸம். எந்த காட்சியிலும் தன்னுடைய உச்ச நட்சத்திர அடையாளங்களை பிரதிபலிக்காத விதம் அருமை.. ( இந்த அர்ப்பணிப்புதான் அமிதாப்பை இன்றும் உச்சத்தில் வைத்திருக்கிறது.. )சூப்பர்ஸ்டார் ஷமிதாப்பாக தனுஷின் அறிமுகம் அமர்க்களம் என்றால் ப்ளாஷ்பேக்கில் ,போதையில் சருகுகளில் விழுந்து கிடக்கும் பிரக்ஞையற்ற அறிமுகத்தில் அமிதாப் ஜி அட்டகாசம் ஜி. "மனம்" தெலுங்கு படத்தில் டாக்டர் பிரதாப் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களில் கடந்து போகும் துணைநடிகராக அசத்திய அசாத்திய துணிவு அமிதாப்பிற்கு மட்டுமே சாத்தியம்.. 2) ராஜ்குமார் ஹிரானி,அனுராக் பாசு, போனிகபூர்,ரேகா,ருக்மணி ,அபிநயா என போகிறபோக்கில் பிரபலங்கள் வந்துசெல்வது..மிரளவைத்த சாத்தியம்.. முதல் தர திரையரங்கம், முதல் வகுப்பு ரசிகர்கள்.. வாவ், மார்வ்லெஸ்,ஆஸம், என பாராட்டுகள் அப்லாஸ்கள்..தரைலோக்கல் அளவிற்கு இறங்கி விசிலடிக்க நினைத்து அடக்கி ரசித்த காட்சிகள் பல.. வகுப்பாசிரியர் முன் நடித்துக்காட்டும் சிறுவனின் நடிப்பிற்கும்,அந்த காட்சிக்கான பி(மு)ன்னணி இசைக்கும் முதல் விசில்.. தனுஷின் சைகை மொழி புரியாமல் அமிதாப் "சப்டைட்டில் சப்டைட்டில்"என அக்ஷராவிடம் கேட்கும் போதும், இந்த பையனுக்கும் சேர்த்து 3 டீ கொண்டுவரச்சொல்லி அக்ஷராவின் தோற்றத்தை கலாய்க்கும் போதும் , நீ எடுக்க போகும் படமாவது கலரா இருக்குமா? இல்ல அதுவும் கறுப்பாதான் இருக்குமா?எனஅக்ஷராவின் பேவரிட் கலர் பற்றிய கமென்ட்டை சிரிக்காமல் சிக்ஸர் அடித்த போதும் நிறுத்தமால் விசிலடித்திருக்க வேண்டும்.. தனுஷை புதைத்த இடத்தில் குரலை இழந்த அமிதாப் உடைந்து அழுவதும், அதே இடத்தில் பேசி பயிற்சி எடுப்பதுமாக படம் முடியும் தருணத்தில் மொத்த பார்வையாளர்களும் மனதிற்குள்ளேயே விசிலடித்திருக்க வேண்டும்.. (படம் முடிந்த பிறகு எழுத்துகள் ஓட அதன் பின் வரும் இசை............ சொல்ல முடியாத உணர்வுக்குள் தள்ளி விடுகிறது) காட்சி முடிந்து, திரையரங்கின் வெண்திரை பார்த்து வெளிவரும் வேளையில், " whisky is rare, baani is every where" என்று போதை ஏறிய அமிதாப்பின் குரல்,நம்மை பின் தொடர்வது போலொரு மாயை மனதின் பரப்பில் ஆழச்சூழ்ந்து விடுவது சாத்தியமான உண்மை!! எல்லாம் சரிதான்.. இந்த படத்தில் ஒரு குறைகூட இல்லையா என்ற கேள்வி எழும்தானே?? குறைகள் கண்டுபிடிப்பதற்கான இடத்தை ஷமிதாப் கொடுக்கவில்லை என்பது சிறந்த பதிலாக இருக்கும் தானே? சில கேள்விகளுக்கு மாற்று கேள்விதான் மாறாத நல்ல பதில்.!!. பாலா..

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

நில்.. கவனி.. செல்லாதே!!

வாகன நெரிசல்களினூடே வலமிருந்து இடமாக பிரதான
சாலையைக் கடக்கும் குறுகிய
நேரத்திற்குள் காலம் காலாவதி
ஆகிவிடுமென அலுத்துக்கொண்டே கடக்க யத்தனிக்கிறார்கள் சிலர்..

அவசர அவசரமாக கைகளை நீட்டியபடி சாலையின் நெரிசலுக்குள் திட்டுகளுக்கு செவி மடுக்காமல் கடந்தும் விடுகிறார்கள் சிலர்..

அமைதியாக முதுமையின் பிரதான நிதானமாய் காத்துமிருக்கிறார்கள் சிலர்..

சாலையைக்கடக்கும் அவசரத்தில்
அலைபேசியைத் தவறவிட்டு,தவறாமல் எடுத்தும் சென்று விடுகிறார்கள் சிலர்..

சிலர்களில் ஒருவனாய் நானும்,திட்டுவாங்கியபடியோ,தவறவிட்டபடியோ கூட்டத்தோடு
கூட்டமாய்க் கடந்து கொண்டிருப்பேன்,குறுங்கணப் பொழுதில் யாசகம் கேட்ட குழந்தையின் பசி நிறைந்த கண்களை கண்டு கொள்ளாமல்..

நின்று கவனித்து யாசகமிடாமல் கடந்த சாலையில் அக்குழந்தையின் ஏக்கக் கரங்கள் எழுதியிருக்கும் வலமிருந்து இடமாக இடம் பெயர்ந்த மனிதம்
மறந்த சதைப்பிண்டங்களின் மரண விதிகளை..!!

                        -- பாலா .

செவ்வாய், 1 ஜூலை, 2014

ஆமென்..

கைக்கெட்டிய கிளையிலிருந்து ஓரிலையை கிள்ளிப்பறிப்பதற்கும்,அவ்விலை கொஞ்சம் கொஞ்சமாக உயிர் துறந்து சருகாகி உதிர்வதற்கும் என்ன வித்தியாசம்?எனக்குள் கேள்வியெழுப்பி என் விரல்கள் கொய்த புங்கையிலையின் ஜீவனிடம் மானசீகமாக மன்னிப்புக்கோரி வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருந்த இடம் திருநெல்வேலி ஜங்சன் எதிரில் உள்ள இளநீர்க்கடையில்.அடுக்கி வைத்த செங்கற்களின் இடுக்கிலிருந்து சாரை சாரையாய் ஊர்ந்து வரும் கடியெறும்புகளைப்போல மனிதக்கூட்டம் ஜங்சனிலிருந்து வந்தபடியே இருந்தது,இளநீர்க்கொத்தில் செருகி வைக்கப்பட்டிருந்த வெட்டரிவாள் குலதெய்வம் சிலை கையில் வைத்திருக்கும் அழகை கவிழ்த்துப்போட்டபடி கவிந்திருந்த அழகு,ஒற்றை நொடியில் மாமன் மடியில் அமர்ந்து காதுகுத்திய வைபவத்தை மனத்திரையில்ஓட்டிக் கொண்டிருந்தது.இளநீரின் விலைகேட்டு,பேரம் பேசி வாங்கி,ஒரே மூச்சில் சட்டையெல்லாம் சிந்தியவாறு குடித்து,இடப்புறங்கைய்யால் உதடு துடைத்து,வலக்கையிலிருந்த இளநீர்க் கூட்டை பவ்யமாக கீழே கிடத்திய கணம்,நீலநிறச் சல்வார் அணிந்த பெண்ணொருத்தி அலைபேசிக்கொண்டே நடந்து கடந்து கொண்டிருந்தாள்,காலை சிற்றுண்டி முடித்துவிட்டு இருட்டுகடையையொட்டி அமைந்திருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் வாசலில் நின்ற பொழுது,கடந்த அதே உருவம்,அதே நடை,உடை.பின்னிருந்துபார்த்த அவளின் அன்ன நடையழகு அஸ்வதியை நினைவில் கதம்பமாக தள்ளித்தள்ளி கோர்த்துக்கொண்டிருந்தது. இன்று எனக்குள் ஏன் இந்த நியாபக சக்தி ஊற்றைப்போல் கசிந்து கொண்டிருக்கிறது?நியாபகவிழிகள் சிந்தும் முதல் துளி மறதி,அடுத்தடுத்த துளிகள் தான் கண்ணீரும் புன்னகையுமா?என்னில் விழித்த கேள்வியின் நாயகன் மூக்குக்கண்ணாடி முனையிலமர்த்து கெக்கலித்துக் கொண்டிருந்தான்.. "பார்த்த இடத்திலெல்லாம் உன்போல் பாவை தெரியுதடி"என எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்த பாடல்,மதுரை வீதிகளில் அஸ்வதியின் கரம்பற்றி நடந்த காட்சியினை கறுப்பு வெள்ளையாக மறுஒளிபரப்பியபோது,தன் வீட்டை தன் முதுகில் சுமந்து நகரும் நத்தைபோல் புத்தகமூட்டையை முதுகில் சுமந்து கூன் விழுந்த கிழவியொருத்தியின் தள்ளாட்ட நடையை பாதங்களில் ஏந்திய குழந்தையின் பின் நடக்க ஆயத்தமானேன்.நான் நகர்ந்தநொடியின் விரல்களைப்பற்றி,நகரவிடாமல் இடைமறித்தது ," இளநி எவ்ளோ ப்பா ?"என்ற பெண் குரல், நன்கு பரிட்சயமான குரல். சமீபகாலமாக கேட்காமல் நியாபகத்தில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கிற குரல்.குழந்தையின் பின் நடப்பதை மறந்து அக்குரலின் மீது குவிந்ததென் மொத்த கவனமும்.. நிறைய பேர் உடனிருக்கையில் அருகிலிருப்பவர்களை மறந்துவிடும் அளவு கவனக்குறைவாக இருக்கப் பழகிய மனது,யாரும் இல்லாத போதுதான் பழைய நினைவுகளைக் கிளறத்துவங்குகிறது,அந்த கிளறலில் மீண்டும் எழுகின்றன பழைய முகங்கள்,பழைய குரல்கள். அப்படியொரு பழைய குரல்தான் நான் இப்போது கேட்ட குரல்,குரல் கேட்ட திசை நோக்கி பார்வைஎறிந்தேன்.என் ஊர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பெடுத்த சாந்தமேரி டீச்சரின் குரலும் வயதேறிய தோற்றமும்,மாறாத அதே முகவெட்டும் டீச்சர்தான் என்று உறுதிசெய்தது.அருகில் சென்று "நீங்க சாந்தா டீச்சர்தானே?"தயக்கத்துடன் வினாவினேன்."ஆமாம் தம்பி நீங்க?"கேள்வியோடு குழம்பி நின்ற டீச்சரின் கண்களில் நான் யாராகஇருக்குமென்ற துடிப்பு படபடத்திருந்தது.என் அம்மாச்சியின் பெயரைச் சொல்லி டீச்சரின் மாணவன் என்பதைச்சொன்ன பிறகும் என்னைப்பற்றிய நினைவு ஈரம் படர்ந்த நூல்கயிற்றில் விழுந்த முடிச்சை அவிழ்க்க சிரமப்படும் அவஸ்தையை டீச்சருக்கும் உணர்த்திய கணம்,"வலக்கையிலும்,இடக்கையிலும் எழுதக்கற்றுத்தந்து எழுத்தறிவித்த இறைவி சாந்தா டீச்சர்"இந்த வரி உங்களுக்கு மறந்திடுச்சா ? மறுமுறையும் கேள்வியாக தொடர்ந்தேன், "ஏய்,ஏய் நீ அந்த தி.திருக்குமரனா டே,??"அதே திருக்குமரன் தான் நான். நீ இங்க என்னடே பண்ணுத? மதுரைப் பேச்சு வழக்கிலிருந்து நெல்லைப் பேச்சுவழக்கிற்கு இடம்பெயர்ந்திருந்த டீச்சரின் பவுடர் கலந்த வியர்வை வாசனை மதுரையிலிருந்து இன்றளவிலும் இடம்பெயரவேயில்லை.அதுஅன்பின் வாசம் ,டீச்சருக்கென்ற அடையாள வாசம் மாறவே மாறாது.எனக்குள்ளே யோசித்து,"சும்மா ஒரு ட்ரிப் ஊர்சுத்தல்"என பதில் சொல்லி "நீங்க எப்போ நெல்லை வந்தீங்க? புன்னகையுடன் நான் தொடர,"மூத்தவள மதுரைல கட்டிக்கொடுத்தாச்சுலா;எளையவள இங்க இரவணசமுத்திரத்துல கட்டிக்கொடுத்திருக்கு.அதாம்ல அங்கையும் இங்கையுமா இருக்கேன்"ஒரே மூச்சில் இருமகள்களின் வாழ்வையும் சொல்லி முடித்த பெருமிதமும்,அங்கிங்குமாக அல்லாடும் தாய்மையின் அலுப்பன்பும் டீச்சரின் பேச்சில் அழகாய்த் தென்பட்டது.திருநெல்வேலில ஒரு சின்ன ஜோலி அத முடிச்சிட்டு வாரேன் இப்போ.திரும்ப எளையவள பாக்க போவணும்.இளநீரை குடித்த உற்சாகம் டீச்சரின் பேச்சில் ஆசுவாசமாகியிருந்தது ."ரோஸ்லின் ஞானமேரி தானே உங்க இளைய மகள் பேரு?"டீச்சரிடம் ஆர்வமாகக்கேட்க வைத்த அந்த உணர்விற்கு எந்த அகராதியிலாவது விளக்கம் பதிலாகஇருக்குமா?மீண்டும் கேள்வியின் நாயகன் எழுந்துவிட்டான்."ஆமாம்டே, இங்கன தான் தென்காசி பக்கத்துல க்ளினிக் வெச்சிருக்கு;அங்கதான் கிளம்பிட்டுஇருக்கேன்" 6/6/1991 ல் பயத்தோடு முதல் வகுப்பிற்கு புதிதாய்ச் சேர்ந்த நாளில் வாஞ்சையோடு வரவேற்ற அந்த புன்னகை டீச்சர் முகத்தில் மாறாமலே அப்பிக்கிடந்தது,இப்போதும். "நானும் உங்களோட வரலாமாடீச்சர்"? 'இதென்னடே கேள்வி தாராளமா வரலாம்,'1ம் வகுப்புமுதல் 8ம்வகுப்புவரை ஒரு பள்ளியில் குறைந்த பட்சம் வாரத்தில் 5நாட்கள் பார்த்துப் பழகி பேசி மரியாதையுடன் மனதிற்குள் நேசித்து,"ஆடுமாடுகள் போல் வாய்வழியே அம்மாவை அறிந்திருந்த பால்யவயதில் எழுத்தின் வாயிலாக அம்மாவை அறிமுகம் செய்த குருவினுடன் பயணிக்க கிடைத்த வாய்ப்பை யார் தவறவிடுவார்கள்??"உடனே கிளம்பிவிட்டேன்.நெல்லையிலிருந்து மதுரை வரை செல்லும் இரயிலில். மதிய வெயில்,மாலை வெயிலாய் தடம் புரண்டுகொண்டிருந்த நேரம்,இரயிலின் பாதச்சக்கரங்கள் சற்றே இளைப்பாற நின்ற இடம் தென்காசி.குற்றாலத்தின் குளுமையைக் களவாடி தன் மீது போர்த்தியிருந்த தென்காசிக்கு நான் வருவது இதுவே முதல்முறை.பெரியஅளவில்லாமலும்,சிறிய அளவில்லாமலும் நடுத்தரமான ஒரு அளவில் அழகாக அமைந்திருந்தது தென்காசி ஜங்சன். ஜங்சனின் வெளிப்புற வாசலில் ஈக்களாய் மொய்த்துக்கொண்டிருந்த ஆட்டோக்காரர்களில் ஒருவரைத்தேர்வு செய்து,இலஞ்சி செல்லும் பிரதானசாலையில் அமைந்திருக்கும் க்ளினிக் பெயரைச்சொல்லி ஆட்டோவிற்கான கட்டணம் எவ்வளவு எனக்கேட்டு டீச்சரும் நானும் உட்கார்ந்த போது,எதிர்ப்பட்ட சுவரில் "வீரம்"பட போஸ்டரில் வெள்ளுடை வேந்தனாக நரைத்த தலையுடன் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தார் அஜித்.பரதன்dts,தினசரி 4காட்சிகள் என துண்டு போஸ்டர் தமன்னாவின் '0'சைஸ் இடையில் ஒட்டிஒட்டாமல் படபடத்துக்கொண்டிருந்தது.போஸ்டர் ஒட்டியிருந்த சுவற்றிற்கு குடைபிடித்து நின்ற தூங்குமூஞ்சி மரக்கிளையில் அக்காகுருவிகள் கூட்டமாக கூடடைந்த மகிழ்வில் குலாவிக்கொண்டிருந்தன.பொதுவாக சித்திரைமாதங்களில்தான் அக்காகுருவிகள் ஊருக்குள் திரிவதாக அம்மாச்சி சொன்னநியாபகம் வந்தது. ஆட்டோ கிளம்ப கர்ஜித்த நொடி மீண்டும் டீச்சரின் அருகாமையிலமர்ந்து பயணம் தொடர்ந்தது.ஒவ்வொரு ஊரின் அடையாளங்களைச் சுமந்து நம்மை வரவேற்பது,ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான்போல,"பரணி சில்க்ஸ் A/C,உங்கள் இராஜாமணி டெக்ஸ்டைல்ஸ்" என ஆட்டோ செல்லும் வழியில் சுவர்விளம்பரங்கள் தென்காசியின் அழகை மெருகேற்றியிருந்தன.க்ளினிக் வாசலில் நின்ற ஆட்டோவிற்கு பணம் கொடுக்க பர்ஸை எடுத்த என் கைகளை இறுகப்பிடித்தது டீச்சரின் கைகள்,விபத்தில் சிக்கி ICUவில் கிடந்து உயிரைக்கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்து மரணத்தில் தவறாகத் தேடிக்கொண்டிருந்த அஸ்வதியின் கைகள் கடைசியாகப்பற்றிய இறுக்கம் டீச்சரின் கைகளிலிருந்தது வியப்பேதான்."ஆத்ம நண்பர்களாயினும் அனுமதி பெற்று உள்ளே வரவும்" என்றவாசகத்தை இரத்த நிறத்தில் தாங்கியிருந்த கதவைத்திறந்து அனுமதி இல்லாமலே உள் நுழைந்தோம் நானும் டீச்சரும்."தே.ரோஸ்லின் ஞானமேரி;உடற்கூறியல்/மனநல சிறப்பு மருத்துவர்" என்று டேபிளில் வைக்கப் பட்டிருந்த சிறு போர்டு பேப்பர் வெயிட்டாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த வேலைப்பாடு எனக்கு மிகவும் பித்திருந்தது."வாம்மா;எப்ப கிளம்புன?சார் யாரு?"அழகி பட நந்திதாதாஸின் வெள்ளந்திச்சிரிப்பை கன்ன எலும்புகள் மேலெழ,கண்களை இடுக்கி இடைவெளி விழாத பல்வரிசையில் அழகாக சிரித்தது டாக்டரின் முகம். "Iam குள்ளக்கத்திரிக்கா From மதுரை;நீங்க ரோஸ்லின் மான ஞேரிதானே" தவறாக அந்தபெயரை உச்சரித்தும் என்னுடைய பள்ளிக்கால பட்டப்பெயரையும் சொல்லி அறிமுகமாகினேன்."அடப்பாவி 5வது படிக்கும் போதே 8வது படிச்ச புள்ள கிட்ட ஐலவ் யூ சொன்ன ஆடுகாலி திருக்குமரனாடே நீ?சந்தோஷமா இருக்கு;இவ்ளோ நாள் அப்புறம் மீட் பண்றது.டைம் ஆகிட்டு,வா வீட்டுக்கு போகலாம்.போற வழியில பேசிக்கலாம்"உரிமையோடு வீட்டிற்கழைத்த டாக்டரின் பண்பில் பிரமித்து நின்றேன். மாருதி ஸ்விப்ட் நீலநிறக்காரில் இப்போது மீண்டும் டீச்சருடன் சிறுபயணம்.இம்முறை டீச்சரின் இளையமகள் டாக்டரும் உடனிருக்கிற பாக்யமும் கிடைத்திருந்தது. "அப்புறம்டே,வீட்ல எல்லாம் எப்டி இருக்காங்க? அம்மா அப்பா அம்மாச்சிலாம் சௌக்யந்தானே"? கியர் மாத்திய கையோடு பின்னிருக்கும் என்னிடம் டாக்டர் கேள்வி கேட்க,"நீங்க கேட்ட எல்லோருமே நல்லா இருந்தாய்ங்க;இப்போ யாரும் உயிரோடஇல்ல டாக்டர்" விரக்திச்சிரிப்போடு சொன்னேன்."எவ்வளவு சோகமான விசயத்தையும் சிரிச்சிட்டே சொல்றதுதான் பசங்களோட கெத்து" நீ மதுரக்கார பய சொல்லனுமாடே உம்ம ஊரு கெத்த? இந்த அப்ரோச் எனக்குபிடிச்சிருக்கு. keep it up சொன்ன டாக்டருக்கு நன்றிசொன்னேன் புன்னகையால்."என்ன ஒர்க் பண்ற?" நாய்பொழப்பு (சேல்ஸ் ரெஃப்களை உலகறியச்செய்யும் கொச்சைச்சொல்)டாக்டர்; "ஓ..நாய் பிழைப்புனா நன்றியோட இருக்கிறது, நல்ல தொழில்தான் பாக்க"டாக்டருக்கேயான பாசிட்டிவ் அப்ரோச் அந்த பதிலில் பதிவாகியது.பரஸ்பர விசயங்களை பேசிக்கொண்டே வந்ததில் 40நிமிடபயணம் ஓர் அழகியவீட்டு வாசலின் முன் நிறைவடைந்தது. அழைப்புமணியின் சுவிட்சை டாக்டரின் இடது கை நடுவிரல் அழுத்த,உள்ளிருந்து வாரேன் என்ற சப்தத்துடன் கதவை திறந்தான் அழகிய சிறுவன். டாக்டரின் மகனென்ற அடையாளம் அவனின் புன்னகையில்.hai மா,hai பாட்டி,hai..who r u?? என்னைப்பார்த்து அச்சிறுவன் கேட்டவுடன்,"hai am திருக்குமரன்;what is ur name?"பீட்டர் இங்கிலீஷ்தான் இப்போ தலைமுறை பொடியன்களுக்கும் கௌரவமாக இருக்கு தமிழனாடா நாமெல்லாம்? ஷோல்டர உயர்த்தி எழுந்த கேள்வியின்நாயகன் முதுகில் 2 அடி வைத்து சிரித்து அச்சிறுவனின் பதிலுக்காக காத்திருந்த குறுநிமிடங்களில்,விறுவிறுவென,"நத்தோலி ஒரு செறிய மீன் அல்ல" மலையாளப்படத்தில் பஹத்பாசில் தனக்கென நடையில் ஓர் தனி ஸ்டைலுடன் லுங்கியை மடித்துக்கட்டி நடந்துவருவது போல் உள்ளிருந்து வந்தார் டாக்டரின் கணவர். டீச்சருக்கு ஸ்தோத்திரம் சொல்லி என்னையும் உள்ளே வரச்சொன்ன போது "my name is ஜான்சன்"என்ற அச்சிறுவனிடம்,நான் உங்கப்பா பேரக் கேட்கல; உன் பேரச்சொல்லு,"வென்று டாக்டரின் கணவரைப்பார்த்தேன். இந்தமொக்க ஜோக்குக்கு எம்புள்ள சிரிப்பான்னு எதிர்பார்க்காதடே,என்பது போலிருந்தது அவரின் முகம்.என்னைப்பற்றிய சகலவிசயங்களையும் தன் கணவரிடம் சொல்லிக் கொண்டே சப்பாத்தியும்,மாங்காய்க்கூட்டும் தயார் செய்து சாப்பிடச்சொன்ன குடும்பத்தலைவியின் நேர்த்தியில் அசந்துபோனேன்.தன் கணவரும் ஒரு டாக்டரென்ற செய்தியை பேச்சினிடையே வெகுஇயல்பாகச் சொன்ன டாக்டரின் எதார்த்தங்களை புத்தகமாகவே எழுதலாம். சாப்பிட்டு சிறிதுநேரம் பேசிச்சிரித்து கிளம்பத் தயாரானபோது மணி இரவு 9ஐத்தொட நிமிட முள்ளில் ஓடிக்கொண்டிருந்து. டீச்சரிடமும்,டாக்டரிடமும் அவர் கணவரிடமும் நன்றி சொல்லிவிட்டு கண்களை அருகிருந்த ஸோபாவில் உறங்கிக்கொண்டிருந்த ஜான்சனின் கலைந்த கேசத்தின் மீது பதித்தேன். களைந்த கேசத்தின் அழகை கைகளால் வருடி காதோரம் நான் bye சொல்ல,உறக்கத்திலே bye uncle என்றான் ஜான். வாசல் வரை அமைதியாக உடன்வந்து வழியனுப்பிய டாக்டர் நான் செருப்பணிந்த குறுகிய நொடிகளில்,"அடுத்து என்ன பண்றதா உத்தேசம் தற்கொலைதானடே?"அந்த கேள்வியில் இருந்த உண்மையின் பிரமிப்பு அதிர்ச்சியாய் உறைந்தது என்னில்."எப்டிக்கா,என் மனசுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் உங்களுக்கு தெரியவந்தது"ஆச்சரியமாக கேட்டேன். நோயாளியோட வாய் சில நேரம் பொய் பேசும்,ஆனா கண்கள் பொய் பேசாது;கண்ணப்பார்த்து மனச படிச்சாதான் மருத்துவரா இருக்க முடியும்,சொல்லு என்ன ப்ராப்ளம் உனக்கு??இந்த அதிர்ச்சியில் டாக்டரை அக்காவென நான் அழைத்ததும் ஆச்சர்யமே. கனத்த மௌனம் விண்கல்லாக எங்களிருவரினிடையே பெரும் கூச்சலுடன் விழ, லேசான விசும்பலுடன் அஸ்வதியின் பெயரை உச்சரித்தேன்."என்ன லவ்வா?" டாக்டரின் மென்குரல் ஆறுதலாய் ஒலித்தது." இதுவும் ஒருவித லவ்தான்;மேரேஜ்க்கு அப்புறமா வந்த லவ்.அம்மா,அப்பா இறந்தபிறகு மாமாவோட வற்புறுத்தலால் அஸ்வதிய கட்டிக்கிட்டேன்.bsc ஃபைனல் இயர் படிச்சிட்டு இருந்தா.முதல்ல 5மாசம் அவளுக்கும் எனக்கும் புரிதல் சரியா ட்யூன் ஆகாம முட்டல் மோதல்தான் அவளே என்ன புரிஞ்சு நடக்க ஆரம்பிச்சது பெரிய மேஜிக்;முன்கோபம் இல்லைனா நீ ரொம்ப நல்லவன் னு சொல்லி சிரிப்பா. போன மாசம் ஒரு விபத்துல இறந்துட்டா; நான் ரொம்ப நேசிச்ச எல்லோரும் சீக்கிரமே என்னைவிட்டு திரும்ப வரமுடியாத தூரம் போய்ட்டாங்க.அதான் நானும் அந்த தூரத்துக்கே போய்டலாம் னு ஊரவிட்டு கிளம்பிட்டேன்,4நாளாக இங்கதான் சுத்திட்டுஇருக்கேன்" விசும்பல் கண்ணீராக திரிந்து வழியமுனைகையில் என் இதழ்கள் பேச்சை நிறுத்தியது.sorry ,cool cool பெரிய இழப்புதான்.யாராலும் நிரப்ப முடியாத இழப்புதான்.நாம நேசிச்சவங்க உயிரோட இல்லே னா நாமளும் உயிர விடனும் னு நினைக்கிறது முட்டாள்தனம்;யார் இல்லாம இருந்தாலும் தனியா வாழ கத்துக்கணும்.உன்னோட தேவை கொஞ்சம் அன்பும்; நிறைய நம்பிக்கையும் தான் அன்புகாட்ட நிறைய பேர் இருக்காங்க,நம்பிக்கை நீயே வரவைச்சிக்கனும்டே,டாக்டரா பேசல,ஒரு சக மனுஷியா சொல்றேன் வாழ முயற்சிஎடு;சாக முயற்சி எடுக்காத ப்ளீஸ்"கெஞ்சலுடன் பேசி முடித்த டாக்டரின் கைகளை பற்றியழத்தோன்றியது. வாசல் கேட்முன் புங்கம்பூக்கள் உதிர்ந்துகிடக்க,நிலவொளியில் மினுமினுத்த புங்கையிலையின் நிழல்கள் பூக்களை ஆறத்தழுவிக்கொண்டிருந்த நிமிடத்தில்,"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு;வாரேன்"என வீட்டினுள் இருந்த பைபிளோடு திரும்பி வந்த டாக்டர்,"இதப்படி னு சொல்லமாட்டேன்; இத உன்னோட நம்பிக்கையின் அடையாளமா நினைச்சு வாங்கிக்கோ" நீயும் என் கூடப்பிறந்தவன் மாதிரிதான் புதுவாழ்க்கைய தொடங்கு போ "மாறாத புன்னகையோடு பைபிளை நீட்டியது டாக்டரான ஒரு உடன்பிறவாத சகோதரி. அன்பின் சுமையைவிட, கருணையின் சுமையைவிட, கர்த்தன் ஏந்திய சிலுவையின் சுமையைவிட கனத்தது, அந்த பைபிளின் சுமை. மீண்டும் சாகாமல் வாழச் சொல்கிற நம்பிக்கையின் சுமை அதிகமாகவே கனக்கத்தான் செய்தது.தீர்க்கமாக டாக்டரிடம் சொன்னேன்,என் அலைபேசி எண்ணைக் கொடுத்து,"இப்போ இல்ல;உங்களுக்கு எப்போ தோணுமோ அப்போ ஒரு கால் பண்ணுங்க" என் மரணம் இயற்கையாக நிகழ்ந்திருந்தா மட்டும் தான் நான் இல்லை னு அர்த்தமாகும்"என்று. 'வெரிகுட்,கண்டிப்பா ஒருநாள் பேசுவேன்.நம்பு,நம்பிக்கைதான் எல்லாமே, போய்ட்டு வாடே'பாந்தமான வார்த்தைகளோடே டாக்டர் நான் கிளம்பும் வரை வாசலில் நிற்க,"ஞானம் போதிமரத்தடியில் மட்டுமில்ல; புங்கைமரத்தடியிலும் கிடைக்கும்"என நிரூபிச்சிட்டீங்க அக்கா என்றேன்."போடே குள்ளக்கத்திரிக்கா" பொய்க் கோபம் கொண்டு சிரித்து என்னை அனுப்பி வைத்தது டாக்டரின் அழகான கண்டிப்பு... சிலமாதங்களுக்குப்பிறகு... "உலகினில் மிக உயரம், மனிதனின் சிறுஇதயம்" விஜய் ஆண்டனியின் குரல்என் அலைபேசி அழைப்பிசையாய் ஒலித்தது. "ஹலோ திரு சார் இருக்காங்களா?" எதிர் முனையில்... "சொல்லுங்க;நான் திரு தான் பேசுறேன்" என் பதில்.. "டேய்,குள்ளக்கத்திரிக்கா, இன்னும் உயிரோடதான் இருக்கியா?நான் டாக்டர் ரோஸ்லின் ஞான மேரி பேசுதேன்,"அலைபேசியிலும் மாறாத புன்னகையின் ஒலி"? கேள்வியோடு ,அக்கா எப்டி இருக்கீங்க" என்றேன். "அக்காவ பார்க்க மதுரை வந்திருக்கேன்,நீயும் வாயேன் அக்கா வீட்டுக்கு.அட்ரஸ மெசேஜ் பண்றேன் மறக்காம வந்து சேருடே"டாக்டரின் அன்பில் கலங்கிய என் விழிகளைத் துடைக்க மனம் வராமல் ஆனந்தமாக அழுதபடி நேதாஜி சாலையோர டீக்கடை வாசலில் நின்ற போது,"பூஜ்ஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு கிழி,அதுக்கு மதிப்பு கூடுமடா" நம்பிக்கை ஊட்டும் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் கொஞ்சல் மொழியில் பாடிக்கொண்டிருந்தார்,டீக்கடை ஸ்பீக்கரில்.. "ஆமென்" (முற்றும்) - பாலா. ் ் ் ote from Royal Bird http://bit.ly/Notepad_Pro

ஞாயிறு, 1 ஜூன், 2014

இசையாலணையும் பெயர்..

தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் நிறைவுறும் ஒவ்வொரு மனித வாழ்விலும் இசையென்பது உடன் வரும் நிழலைப்போல தொடர்ந்து வந்துகொண்டே தானிருக்கிறது இன்றும்.. ஆதியில் விலங்குகளை விரட்டவும்,பயங்களைத் துரத்தவும் ஒலியெழுப்பி சப்தத்தை மௌனத்திடமிருந்து மொழி பெயர்த்தார்கள், நாகரீகம் வளர,வளர சப்தம் சங்கீதமானது. இன்றைய காலத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒரு தலைமுறையென்பது 50 முதல் 60 வயதிற்குள்ளேயே முடிந்துவிடும் அபாய கட்டத்தில் அறுந்து விழாமல் தொக்கி நிற்கிறது, இந்தத் தலைமுறையின் இசைத் தட்டினை 30 வருடங்கள் பின்னோக்கி பின்னோக்கிச் சுழற்றினால் இசையின் சகல பரிவாரங்களையும் ஒற்றை மனிதனாக சுமந்து நிற்கிறார் இளையராஜா என்ற பண்ணைபுர பாட்டுக்கார ராசய்யா.. இந்திப்பட பாடல்களின் ஆக்கிரமிப்பு தமிழ்த்திரைப்பட பாடல் ரசிகர்களின் காதைத் திருகிக் கொண்டிருந்த தருணங்களில் தமிழ்ப்பாரம்பரிய நாட்டார் வழக்கு இசையை உயிர்ப்புடனும்,துடிப்புடனும் பாடல்களில் மெருகேற்றி நம் செவிக்கு உணவாக்கிய உன்னத கலைஞன் இளைய ராஜா!! இசைத்தட்டிலிருந்து தொழில்நுட்பம் ஆடியோ கேசட்டிற்குள் குடியமர்ந்த காலத்தில்,எங்கள் வீட்டில் வானொலிப்பெட்டி இருந்ததே ஆடம்பரமென நினைத்த பொற்காலம் அது, இலங்கை வானொலியில் மாலை 4.00 முதல் 4.30 வரை"இசைக்களஞ்சியம்" என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.ஆண்குரலில் தனித்து ஒரு பாடல்,பெண் குரலில் தனித்து ஒருபாடல்,ஜோடிக்குரலில் ஒருபாடல்,பலகுரல் கலந்து ஒருபாடல், நகைச்சுவை உணர்வேந்திய ஒரு பாடலென 5 பாடல்கள் வரும். அடுத்து ஒலிக்க இருப்பது,ராகதேவன் இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் ,எஸ்பிபியின் மயக்கும் குரலில் பொன் மாலைப்பொழுது பாடல்,நிழல்கள் படத்திலிருந்து.. காற்றலைகளில் தவழ்ந்த படி என இராஜேஸ்வரி சண்முகம் அம்மாவின் தேமதுரக்குரல் அறிமுகப்படுத்தியது இளையராஜாவை எனக்கு 6வயதில். அன்றிலிருந்து இன்று வரை அவரது இசை மீது தீராக்காதல். இசை என்பது செவிகளையும் தாண்டி மனதின் ஜீவ நாடிகளுக்குள் பசையற்று கிடக்கும் உயிரணுக்களை ஒன்றாகத்திரட்டி மயிலிறகால் வருடுவதைப் போலிருக்க வேண்டும்.அதைச் செவ்வெனச் செய்வது இளையராஜாவின் இசை மட்டுமே . இது என் மனது தீர்மானித்து விடாப்பிடியாக சொல்வது.!! பால்யம் தீர்ந்ததும், பருவத் தினவுகளை பருக ஆயத்தமாகி விடுகிறது காலம்,அப்பருவத்தினவுகள் நுரைத்து அடங்கி நீர்த்து ஏகத்திற்கும் ஏங்கி நிற்கிற தனிமை சூழ் வெறுமை என் மனதை பிசைகிற போதெல்லாம்," தனியானா என்ன? துணையாக நான் பாடும் பாட்டுண்டு" எனஆறத்தழுவி ஆறுதல் கரம் நீட்டுவதும் இளையராஜா இசைதான்.. உண்பதைப்போல,நீர்பருகுவதைப்போல,சுவாசிப்பதைப்போல,அன்றாட தேவைகளாகவும்,அத்யாவசியமானதாகவும் இளையராஜாவின் இசையேந்திய பாடல்களுடன் பயணித்து வரும் என்னைப் போன்று ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வேலை,சூழ்நிலை காரணமாக குடும்பங்களை பிரிந்து வாழும் நகரத்து மனிதர்களின் தனிமை குடியிருக்கும் இரவின் கதவை தட்டினால் அங்கே துணைக்கு இளையராஜாவின் இசை மெலிதாக கசிந்தபடிதான் இருக்கிறது இன்றளவிலும்.!! "தாய்மடி+தகப்பன் தோள்கள்= இளையராஜா இசை"என ஒருமுறை நான் எழுதிய போது,"காதலியின்முத்தம்+ நண்பனின் தோள்கள் = ரஹ்மான் இசை" என எதிர்ப்பதமாக என் தலைமுறைக்கு முந்தைய தாய் ஒருவர் எழுதியிருந்தார்கள், இதை எதிர்ப்பதம் என்று சொல்வதை விட முந்தைய தலைமுறைகளின் ரசனைகள் ஊசியிலை மரங்களைப்போல் உயர்ந்தும்,ஆல,அரச மரக்கிளைகள் போல அகன்றும்,அடர்ந்தும் பரவி நிறபது ஆரோக்யமான விஷயமே!! இன்றைய சூழலில் அனிருத் வரையிலான இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிற அளவு ரசிப்புத்தன்மை விரிந்திருந்தாலும்,கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தையிடம் வீட்டிலுள்ள உறவுகளில் யாரைப் பிடிக்கும் எனக் கேட்டால் தயக்கத்தோடும்,குழப்பத்தோடும் யோசித்து அம்மாவைக் கை காட்டுவதைப்போல,என் மனதும் பிடித்த இசையமைப்பாளர் என்று இளையராஜாவைக் கை காட்டுகிறது!! ஜூன் 2 ல் பிறந்தநாள் காணும் இசைஞானியை வாழ்த்த வயதில்லை,வணங்க மனதும் வயதும் இருக்கிறது, அவர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்!! _ பாலா!் ் ote from Royal Bird http://bit.ly/Notepad_Pro

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

பிரிதலும்,பிரிதலின் நிமித்தமும்..

நகராட்சி உயர்நிலைப்பள்ளி
பத்தாம் வகுப்பு 'ஈ'பிரிவில்
முதல் வரிசையில் மூன்றாவது
ஆளாக அமர்ந்திருந்த குணக்கொடிக்கு..

அன்புள்ளவென எழுதத்தெம்பில்லாத அன்பனின்
முதல் கடிதம்.

அரசஇலைகள் சலசலக்கும்
வசந்தகாலமொன்றின் காலையில்
வட்டக்குளத் தாமரை மொட்டாக
சிரம் தாழ்த்தி பள்ளியேகி , பசித்த
வயிறுடன் சுதிசேராமல் கடவுள்
வாழ்த்துப்பாடி,தோழிகளோடு
ஓயாது சிரித்த நாட்களில்
வகுப்பறையெங்கும் சங்கீதச்
சிதறல்களாய் நிறைந்திருந்தாய்..

நீலம் பூத்த வெள்ளைத் தாவணியின் நுனிக்கசங்கலில்
முகம் துடைத்து ஒப்பனையற்று
உருப்பெறும் அன்றைய உனதழகு..

குட்டிச்சுவர் இளவட்டங்களின்
சலவட்டத்தனங்களை நெற்றிக்கண்
திறவாமல் சுட்டெரித்து அகலும்
தீர்க்கப்பார்வையில் பாரதி வழித்
தோன்றலாய் தினவுடன்
நீ நடைபோட்ட நாட்களை மறக்க
முடியுமா??

இடையதிரா நடையசைவில் சாமியாடும் உன் சடையாரத்தின்
பின் பித்தனாய் அலைந்த பத்து பேரில் நானும் ஒருவன்..

பள்ளி முடிந்த மாலை வேளையொன்றில், நேசமாகப்
புன்னகையித்து கைக்குட்டைக்குள் மறைத்து
வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாயை
என்னிடம் நீட்டி முயல்பாய்ச்சலாய்
நீ நகர்ந்த அந்த நாளின் தித்திப்பு
இன்றும் நாவிடுக்கில் தேனூட்டியபடி..

வறுமைக்கு வாக்கப்பட்ட நாளொன்றில், கணக்கு வாத்தியாரின் பிரம்படிக்குச்
சிறுமைப்பட்டு சிவந்த உள்ளங்கை
நிறத்தைக் கன்னப்பரப்பில் நாணமாக
நிரப்பி,தூரத்து உறவுக்காரன் விரல்
பிடித்து மேளம் முழங்க இல்லற
வாழ்வில் எட்டுவைத்து நீ மறைந்த
சேதியினை அம்பலப்படுத்தியது
அன்றைய தென்வடல் சூரைக்காற்று..

முன் நெற்றி முடியுதிர்ந்து,தாடையருகே நரை பிறந்த
என் இளமையின் இறுதியில்
பாலையத்து மாலையம்மன்
கோவில் திருவிழா விளக்கொளியில்
காணக்கிடைத்ததுன் முகம்..அன்று
பார்த்த அதே முகம்.. இன்று பச்சயமிழந்த
பயிர் போல உயிரற்று வாடி வதங்கியபடி..

கையிலொன்றும்,இடுப்பிலொன்றுமாக இரண்டு பிள்ளைகளின் தாயான நீ இன்னும்
சிறுபிள்ளைதான்..

"வெறுஞ்சிறுக்கி மவளே, வளவிக்கடையக் கண்டா, ஒங்காலடியில வேர் மொளச்சிருமே" விரல் பிடித்துகூட்டிப்போன உன் உறவுக்காரன் வசவுகேட்டு,
எசக்கத்து நீ நடந்த பாதையில்
புரண்டெழும் புழுதியில் தோன்றி
மறையுதடி வாழ்ந்து கெட்ட உன் வாழ்வின் மரண வலி..

அடியே குணக்கொடி.. உன்னிடம் கொடுக்கப்படாத என் கடிதத்தில் அந்துப்பூச்சிகள் அரித்தது போக எஞ்சியிருந்த
வார்த்தைகளில் இன்றும் கன்னிகழியாமல் நிற்கிறது
என் முதல் காதலும்,முதல் பிரிவும்!!
                              - பாலா.

(* சல வட்டத்தனம் - இளைஞர்களின்
குறும்பான கேலிப்பேச்சின் வட்டார
வழக்குச்சொல், எசக்கத்து - ஜீவனிழந்த நிலையின்  வட்டார வழக்குச்சொல்.)

வியாழன், 16 ஜனவரி, 2014

ம்..

" I hate u " கார்த்திகாவிடமிருந்து
SmS. பதறாமல் ஆசுவாசமாக அவளுக்கு கால் செய்தேன். 5வது
முறையாக அழைத்தபோது "ம்ம் சொல்லுங்க சார், இன்னும் என்ன மறக்காம இருக்கீங்க போல?!" கேள்வியும்,கேலியுமாய் ஒரு பதில். இப்ப என்ன ஆச்சு? I hate u னு sms அனுப்பியிருக்க? என அவளிடம் கடிந்தகுரலில் பதிலுக்கு கேள்விகளை நான் அடுக்க எதிர் முனையில் அவளின் விசும்பல்...
சில நொடிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது !!
" இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா' தெருமுனை டீக்கடை ஸ்பீக்கரில் பாடல் அலறியபோது எனக்குள்
சிரித்தபடி நகர்ந்தேன்.ஆணிகள் அழைத்த காரணத்தால்!!

"வழக்கம் போல இன்னிக்கும் லேட்டாகிருச்சு. என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிற தொணியில்  கழுவி ஊத்த ஆயத்தமாக இருக்கும் டீம்லீடர எப்படி சமாளிக்கப்போறேனோ?
தெரியல.குலசாமிமேல பாரத்தப்
போட்டுரலாம் "னு எனக்குள்ளே
பேசிமுடிவெடுத்து கேபினுக்குள்
நுழைய முற்பட்ட போது," என்ன மா கண்ணா, லோ பேட்டரியான செல் மாதிரி மூஞ்சி டல்லா இருக்கு? எனி ப்ராப்ளம்? என மலர்விழி நக்கல் கலந்து விசாரிக்க
"ம்ம்ம். " என்றேன். சிரித்தவாறே
போ மகனே, நாட்டாமை உன்ன தான் தேடிட்டுருக்கார்னு சொல்லி
சிரிப்பைத்தொடர்ந்தாள் சிரிப்பழகி
மலர்விழி..

வெயிட்,வெயிட் நீயாரு? மலர்விழியாரு? கார்த்திகா யாரு?
என்ன சொல்ல வர்ற? னு கேட்பீங்க
தானே?..

என் பேரு கண்ணன். சங்கத்தமிழை சங்கறுத்த தமிழ் மண்ணின் மைந்தன்.(அட நம்ம மதுரைங்க)  பொழப்புக்காக நல்லவன்
வேஷம் கட்ட வந்த இடம் சென்னை. பேஸிக்கலி
நான் ரொம்ப நல்லவன். நல்ல வேளையா இப்போ என் பக்கத்துல மலர்விழி இல்ல. இல்லாங்காட்டினா நான் நல்லவன் னு சொன்ன அடுத்த நிமிஷமே துப்பியிருப்பா.. திருவள்ளுவர் கூட
ஒரே ஒரு குறள்ல தான் அதிகமா துப்பியிருக்காரு. இவ என்னைய துப்பாத நாளே கிடையாது.ஆனாலும் அவகிட்ட இதுவரை கோபப்பட்டதில்ல. ரொம்ப திறமையானவ, அன்பானவ, என்னவிட ரொம்ம்ம்பப நல்லவ..

மலர்விழி பத்தி சிம்பிளா சொல்லனும்னா அவ சத்யராஜ்
மாதிரி. அவ கேரக்டர புரிஞ்சிக்கவே
முடியாது,வில்லத்தனமான ஹீரோயிசம் தான் அவளோட ஸ்டைல். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும் னு சொல்லுவாய்ங்க. அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவள். என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிற முதல் பொண்ணும் இவ தான். எல்லோரும் அவகிட்ட உண்மையா நடந்துக்கனும் னு நினைப்பா.. இதுதான் அவளோட ப்ளஸ், மைனஸூம் அதேதான்..

கார்த்திகாவை பத்தி தலைவன் டிஆர் ஸ்டைல்ல சொல்லிறலாம்
'அவ ஈபிள் டவரு, நானோ  குட்டிச்சுவரு!'100% பெர்பெக்ட்டா இருக்கனும் னு நினைக்கிற கேரக்டர். 1% கூட பெர்பெக்டா இருக்க முடியாத கேரக்டர் நான்.
இதுபோதாதா? லவ் ஆகிருச்சு.ஒரே ஆபீஸ்ல வேற வேற டீம்ல ஒர்க் பண்ற எங்களுக்குள்ள தினமும் சண்டைதான். ஆனாலும் இதுவரை ஈகோ ப்ராப்ளம் வந்ததில்ல. இன்னைக்குதான் முதன்முதலா அவகிட்ட கோபமா பேசிஇருக்கேன்!!

லன்ஞ்ச் டைம்ல அவளா என்கிட்ட பேசிடுவா என்ற தைரியத்தில் வேலைகளைத்தொடர்ந்தேன்..  லன்ச் டைம் தாண்டியும் இருவரும்
பேசிக்கொள்ளவில்லை மனசு உறுத்துவது போலொரு பிரம்மை .
சலனத்தோடுநிமிடங்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்..

என்ன பிரச்சினை டா? நான் அவகிட்ட பேசி பார்க்கவா? மலர்விழி என்னிடம் வந்து கேட்ட போது சந்தோஷமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக்காம "நீசகுனியோட லேடி வெர்ஷனாச்சே  அதான் கொஞ்சம் பயமா இருக்கு"வென கலாய்த்த போது கொடூரமா ஒருலுக் விட்டு
வழக்கம் போல துப்பிட்டு,கார்த்திகா
இருக்கும் கேபினுக்குள் நுழைந்தாள்.

அவளோ அனுஉலை,இவளோ எரிமலை, நடுவுல சிக்கின என்  நிலை? னு என் புத்திக்குள்ள டிஆர் டன்டனக்கா மியூசிக் போட்டாப்ல.
உடனே மலர்விழிக்கு sms அனுப்பினேன்,"தாயே,என் லவ்க்கு சங்கு ஊதிடாத"னு;"ச்சே..உனக்கெல்லாம் அப்டி பண்ணுவேனா? நண்பேன்டா  நீ" என எகத்தாளமாய் பதில்  அனுப்பினது அந்த பக்கி. இருந்தாலும் பயம் லைட்டா என்னையே சுத்திட்டு இருந்திச்சு.

" இப்போ கால் பண்றேன்,அவகிட்ட நான் பேசுறத நீ கேட்டுத்தொலை,
பழகின பாவத்துக்கு என்ன வேலைலாம் பாக்க வேண்டியிருக்கு கெரகம்டா" என மலரிடமிருந்து sms. "கடவுள் இருக்கான்டா  கண்ணா " என எனக்குள் சொல்லியபடி அவர்களது உரையாடலை நேரலையில் கேட்க ஆயத்தமானேன்
(பன்றதெல்லாம் மொள்ள மாரித்தனம்,இதுல உரையாடல்,நேரலை னு தமிழ் பண்டிட் மாதிரி சீன் ஒரு கேடா? இது self த்தூ ,

"என்ன கார்த்தி உனக்கும் கண்ணனுக்கும்,மேரேஜ் னு கேள்விப்பட்டேன் உண்மையா செல்லம்? "  மலரின் கேள்வியில்
கடுப்பாகி"அதெப்டி அவனோட
ப்ரண்ட்ஸ் எல்லோரும் அகராதியாவே பேசறீங்க?  கார்த்திகா கொதிக்கத்தொடங்கினாள்
"அடிப்பாவி ஆரம்பத்திலேயே ஆட்டம் பாம் வெக்கிறீயே? " இது என்னோட மைன்ட் வாய்ஸ்.

cool cool நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்," அவனுக்கும்,உனக்கும் என்ன ப்ராப்ளம்? அவன் மூஞ்சிய பாரு, இவ்ளோ டல்லா இருந்ததே இல்ல,பேசி சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளம் னு ஒன்னும் இல்ல மா  புரிஞ்சுக்கோ" வென தன்மையான குரலில் மலர் பேசினாள்," புரிதல் இருக்குமா;அவன் கிட்ட நேத்து ஈவினிங் பேசறப்போ நாம சேரமுடியாம போனா என்ன பண்ணுவ?" னு கேட்டேன் , உடனே யோசிக்காம வேற பொண்ண கரெக்ட் பண்ணிட்டு போய்டுவேன் னு சிரிக்கிறான், அப்போ என் மேல உண்மையான லவ் இல்ல னு தானே அர்த்தம்? கேள்வி  கலந்த குரலில் விசும்பினாள் கார்த்திகா.!!

" அட லூசு இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா? அவன் ப்ராக்டிக்கலான விசயத்த சொல்லிருக்கான், காதலிக்கிறவரை புத்தியா இருந்திட்டு இப்போ இப்டி தத்தியா நிக்கிறீயே கார்த்தி,"ஒன்னு மட்டும்
தெளிவா புரிஞ்சிக்கோ, பொண்ணுங்க அளவு பசங்களால
பெர்பெக்ட்டா இருக்க முடியாது,
அதுபிறவிக்கோளாறு."பொதுவா 
நம்மகிட்ட க்ளோஸா பழகுற பசங்க மேல ஒரு வித டவுட் வந்துட்டே இருக்கும்,எப்போ ப்ரொப்போஸ் பண்ணிடுவாங்களோ?னு  பட் இவன் என் கிட்ட பழகத்தொடங்கி
பல வருஷமாச்சு,ஒருமுறைகூட
டவுட் வந்ததில்ல,அவனிடம் சில
குறைகள் இருக்கு,ஆனால் நல்லவன், அவன் உன்ன லவ் பண்ற விஷயத்த உன்கிட்ட சொல்றதுக்கு முன்ன என்கிட்டதான் சொன்னான்,
அவனோட குறைகள் என்ன னு பார்க்காம அப்டியே அவன ஏற்றுக்க கத்துக்கோ காதல் வாழ்க்கை அழகா இருக்கும், எனக்கும் எல்லோரயும்
போல லவ் பண்ண ஆசைதான்,பட் என்  அப்பா,அம்மாவோட அன்புக்கு
முன்னால காதல் பெருசா தெரியல,
உன்னோட பிடிவாதத்தால ஒரு நல்ல மனசோட அன்ப இழந்திடாத
இது அட்வைஸ் இல்ல;அவன் மேல இருக்கிற நம்பிக்கைலதான்
உன்கிட்ட பேச வந்தேன்.தவறா  இருந்தா sorry. என மலர் பேசி  முடித்தாள். சிறிது மௌனத்திற்கு பின்,..   "ச்சே ச்சே தவறுக்கு இடமில்ல. நமக்குள்ள sorry சொல்லிக்கனுமா? அவனபத்தி பேசி எனக்கு சில விஷயங்கள் புரிய வெச்சிட்ட Thanks மா" என சமாதானமான குரலில் பேசினாள் கார்த்திகா.!!

"அகெய்ன் sorry மா  நாம இவ்ளோ நேரம் பேசின விஷயத்த எல்லாம் அவனும் கேட்டுட்டுதான் இருந்தான், அவனுக்காக அந்த பாவத்தையும் நானே பண்ணிட்டேன்"என பினிஷிங் டச் கொடுத்து மலர்விழி வில்லத்தனத்தை காட்டிசிரிச்சு கவுத்துட்டா.

ம்.. "உன் மொபைல் ஆன் ல இருக்கு னு தெரியாத அளவு நான் தத்தி இல்ல,நீ கட் பண்ணு நான் கால் பண்றேன் "  என கார்த்திகா
சொன்ன போது எனக்கு கண்ண கட்டிச்சு.
அடுத்த சிலநிமிஷங்களிலேயே
"எமன் காலிங்" கார்த்திகாவோட
மொபைல் நம்பர அப்டிதான் Save பண்ணிருக்கேன், "சொல்லுங்க மேம், எனி ப்ராப்ளம் ? என் கேபினுக்கு உடனே வாங்க சார்"
கார்த்திகாவின் குரலில் குறும்பு கொப்பளித்தது," இல்ல மேம் ஒரு சின்ன ஒர்க் இருக்கு " வென நான் கடமை உணர்ச்சியா பேசின போது
" த்தூ வாடா டேய், உனக்கு அவ்ளோதான் மரியாதை "  இடையே மலரின் குரல், !!

பவ்யமா கார்த்திகாவோட கேபினுக்குள் நுழைந்து கண்ணுல நன்றிய தேக்கி வெச்சினு மலர்விழிய பார்த்தேன்," த்தூ உன் சென்டிமென்ட் பருப்பெல்லாம் இங்க பாயில் ஆகாது " ன்ற  மாதிரி
ஒரு லுக் விட்டு" அவன் மொபைல் ல சிரிப்பழகி னு ஒரு கான்டக்ட் நம்பர் இருக்கு,அந்த நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணி பேசறான்,sms அனுப்பறான், யாரு அது னு கேளு கார்த்தி? என கோர்த்து விட்டு நமட்டுச்சிரிப்பை உதிர்த்தாள் மலர்...

" யாரு சிரிப்பழகி?  அந்த நம்பருக்கு
என் முன்ன கால் பண்ணு" குரலுயர்த்தினாள் கார்த்திகா..
"நீயே கால் பண்ணி பேசு ; பட் கோபப்படாம நிதானமா பேசு" என மொபைலை அவளிடம் கொடுத்து
விட்டு,சிரிப்பை அடக்கி அமைதியாக நின்றேன்.

அவள் கால் பண்ணியதும்," பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை; ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை"
என மலரின் ஃபோனில் ரிங்டோன் ஒலிக்க சத்தமாய் சிரித்து விட்டோம் நானும் மலரும்,,

பொய்யான கோபத்தில் மறுபடியும்
I hate u என்றாள். " நீ வாடா  கண்ணா,இவள விட அழகா வேற பொண்ண பார்த்து கரெக்ட் பண்ணிக்கலாம்" கிடைத்த கேப்பில் கலாய்த்த மலரிடம் " உன் கால் ல விழுறேன் இடத்த காலி பண்ணு தாயி" என கும்பிட்ட போது போங்கடா நீங்களும் உங்க காதலும் " உருப்படவே மாட்டீங்கடா வென  செல்லமாய் சபித்து நகர்ந்தாள்..

U hate me கார்த்தி?  ம்
ம் but I love u என்றேன்...
தழுக்கெனச் சிரித்து செல்லமாக என் தலையில் குட்டி,sorry
டா என்றாள் ,,,,,,,,  ம் ம் ம்

                                  - பாலா.