சனி, 28 டிசம்பர், 2013

அன்பின் மொழி.

இவ்வுலகில் இணையற்றது எது? எனும் கேள்வியை முன்வைத்தால்
உலகமே ஒன்றாய்த்திரண்டு ஒருமித்த குரலில் ஆனந்தக்கூச்சலிடும் அன்பு தான் என்று.தாய்மை,நட்பு,காதல்,பாசம்
என பலகிளைகளாக விரவிக்கிடந்தாலும் அத்தனைக்கும்
முதல்விதையாக அன்பு மட்டுமே!!

அன்பின் பலம், மிகப்பெரும் பலவீனம்.அது கிடைக்கும் வரை பெரிதாய் ஈடுபாடில்லாமல் அலைகிற மனது, அன்பின் விரல் பற்றி நடக்கும் சிறுபிள்ளையென!!
எல்லா மதமும் போதிக்கின்ற பொதுவான உணர்வு உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பது.! அன்பற்ற சூழலை யூகித்துப்பார்க்கையில் வெறுமையின் கோரப்பற்களில்
சிக்கிக்கொண்டு தனிமையுடன் போராடும் பயங்கரம் மனதெங்கும் நிழலாடுகிறது!!

அன்பைப்பற்றி சொல்ல வேண்டுமாயின் தாய்மையைப்பற்றி
சொல்லியாக வேண்டும், தாய்மையைப்பற்றி சொல்ல வேண்டுமாயின் இப்பிறவி முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களுக்கு தாய்மை
பிறவி குணம். ஆண்களுக்கு?!

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என அறைகூவலிடுபவர்களும் அன்பாதிக்கத்தின் அருமை அறிந்தவர்கள்தான். அன்பைச்சொல்வதில் கோபம் ஒருவகை, கண்ணீர் ஒரு வகை. பரவலாக அன்பை பெண்கள் கோபத்தால் முன்மொழிந்து கண்ணீரால் வழிமொழிகிறார்கள்.
ஆண்கள் அன்பை முன் மொழிவதும் வழிமொழிவதும் கோபத்தின் வாயிலாக.!!

ஆண்களுக்குள் தாய்மை இல்லாமல் இல்லை. தகப்பனாக,கணவனாக,காதலனாக அதை வெளிக்கொணரும் முயற்சியில் தோல்வியைத்தழுவியே ஆகவேண்டிய நிர்பந்தம். பெண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள்,அவளைப்புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை என்பது மறுக்கவியலா உண்மை. இருபாலர்களும் ஒருவரையொருவர்
புரிந்து கொள்கையில் அன்பு அவர்கள் வசமாகிறது, புரியாதவர்கள் அன்பின் தேடலுக்கு
வசமாகின்றனர்.!! முதியவர்களின்
காதல் அன்பென்று அறியப்படுமளவு இளைஞர்களின் அன்பு காதலென்று அறியப்படுவதில்லை.எதிர்பால் ஈர்ப்பு,இனக்கவர்ச்சி போன்றவற்றை ஒதுக்கிப்பார்த்தால் ஒவ்வொரு மனதும்அன்பிற்காக ஏங்கி நிற்பது புரியவரும்.காதலும் அன்பின் பிம்பம் தானே?!

சினிமாவிலும் அன்பை முன்நிறுத்தி வெளியாகிற திரைப்படங்கள் காலத்தால் அழியாமல் மனதைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டுதான
இருக்கின்றன. உதிரிப்பூக்கள்,மூன்றாம்பிறை,சேது,love phobia, In the mood for love, போன்ற அன்பைச்சுமந்து நிற்கும் எனக்குப்பிடித்தத்திரைப்படங்களின்
வரிசையில் தற்போதைய வரவு
" Aashiqui 2 "

பிரபலமான மேடைப்பாடகன் ராகுல்:், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, உள்ளீடற்று ஹேங்கரில் காற்றாடும் சட்டைபோல் அவனது சுய வாழ்க்கை. அவனது வாழ்வில் தென்றலாய் நுழைகிற ஆரோஹியின் அன்பும் அடிமையாக்கிவிடுகிறது.குடிப்பழக்கத்தின் கொடூரம்,அன்பின் அதீதம் இவ்விரண்டும் ஒன்று சேர்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளச்செய்கிறது!
மனதிற்கு நெருக்கமான அழகான காட்சிகள்நிறைய.உருக வைக்கிற பாடல்கள் என அற்புதமான உணர்வுக்குவியல்!Aashiqui2

ஹிந்திப்படங்களின் தீவிர ரசிகையான தூரத்துச்சொந்த (250கிமீ தூரம் இருக்கும்) தங்கையிடம், "Aashiqui 2" படம் பார்த்தேனெனச் சொல்லும் போதே
அழுதீங்களாண்ணா? வெனக்கேட்ட
அவளிடம் "இல்லியே; ஹீரோயின்
செம அழகு,படமும்,ஸாங்ஸ் எல்லாம் நல்லா இருந்திச்சு" னு சொன்னவுடனே" போயா லூசு"எனத்தொடங்கி,நிறுத்தாமல் திட்டித்தீர்த்தாள்.
அன்பைச்சொல்வதில் திட்டும் ஒருவகை போல!!

வயதாக,வயதாக அன்பின் தேவையும்,தேடலும் அதிகரித்துக்
கொண்டேதானிருக்கிறது. யாரேனும் வார்த்தைகளில் அன்பை, அன்பின் தேடலை முன்வைத்தாலும் முழு ஈடுபாட்டோடு வாசிக்கத்துவங்கிவிடுகிறது மனது!! அப்படி வாசிக்கையில் பிடித்தமானவைகளும்,நிகழ்வுகளும் கூடவே நினைவிற்கு வந்துவிடுகின்றன!!

"தாயின் புடவைத்தலைப்பு வழியாக தெரிந்த உலகு வேண்டும்
- (@ikaruppaiah) இந்த வரிகளின்
வீரியம் உதிரிப்பூக்கள் படத்தையும்
சில நாட்களாக என்னோடு மௌனத்தால் மட்டுமே உரையாடும் அம்மாவிடம் காரணம் கேட்ட போது மௌனத்தையே பதிலாகத்தந்த நிகழ்வை நியாபகப்படுத்துகிறது!! மௌனமும் ஒரு வகை அன்புதான்.

மையிருட்டு வெளி ஒன்றில் மெழுகுவர்த்தி ஒளிதிறக்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி
வருவதாய் நினைவு! (@karna_sakthi) மனதைத்தொடும்
இந்த வரிகள் In the mood for love
படத்தினை பலமுறை மனதிற்குள்
ஓட்டிச்செல்கிறது, கூடவே
மின் துண்டிக்கப்பட்ட அடர்இருள்
நாளொன்றில் பெய்த மழையின் அழகை அந்த வழி சென்ற பேருந்தின்
விளக்கொளி பிரதிபலித்த காட்சியை
நினைவிலடுக்கி நகர்கிறது.!

எனக்கு அறிவில்லை; உனக்கு அன்பில்லை (@guzhali_)  திருக்குறளாய் இரண்டுவரியில் இருமனதின் சூழலை அழகாகச்சொன்ன விதம்,love phobia படத்தையும்,Aashiqui 2
படம்பார்த்த மறுநாள் காலை
வழக்கமாக வாக்கிங் செல்லும்
மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையருகே தனித்து நிற்கும் பனைமரத்தில் அமர்ந்திருக்கும் ஒற்றைக்குயிலின்
சோகத்தையும் மனதின் பரப்பெங்கும் நிரப்பிச்செல்கின்றது!!

" தவறவிட்ட தருணங்களுக்காகத்
தான்,இப்போது தவமிருக்கிறேன்"
(@rm_anitha) இந்த வரிகளின் ஆழத்தில் மூன்றாம்பிறை படத்தில்
தலைவன் கமல்ஹாசனின் கதாபாத்திரம் உள்ளடங்கிக்கிடப்பது
போலொரு பிரமை. மன அழுத்தமானஓர் மாலைவேளையில்
மதுரை ஆண்டாள்புரத்திலிருக்கும்
சாய்பாபா கோவிலில் என்னையறியால் பல மணிநேரம் உட்கார்ந்திருந்த நிகழ்வை அப்பட்டமாக கண் முன் நிறுத்தியது
மேற்சொன்ன வரிகள்..!!

ஆத்து மீனா அலைஞ்ச மனசு;
ஊத்து நீரா வழியுது வயசு;
சேத்தள்ளி பூசி நின்ன என் ஒடம்பு;
பாத்துப்போன ஒம்பார்வையில பூத்திருச்சு பாதி உசுரு.

சுறுக்குப்பையாட்டம் மனச இறுக்கி முடிஞ்சவளே; ஒம்பின்ன
கிறுக்குப்பிடிச்சு அலையுறனே
குறுக்கு செத்த கோழியாட்டம்!!

கெழுத்தி மீனு கழுத்தப்போல அழுத்திப்புடிச்சும் துள்ளுற..
பழுத்த மொளகா பழ ஒதட்ட
இழுத்துக்கூட்டி மீதி உசுர் அள்ளுவ !!
கூத்துக்கொட்டாயி பின்னால
வேர்த்துச்சொட்ட எம்முன்னால
கூழு கலந்த வெல்லமா ஏழு சென்மம் எணஞ்சிருப்போமின்னு
நாலுகாலு பாய்ச்சலுல சொல்லிப்புட்டு போனவளே..
காத்தணைச்ச கற்பூரமா விட்டுப்போன பாதியில; நாதியத்து
நிக்கிறேன் வீதியில!!

கொல்லப்புறம்,எல்லக்கல்லு,
ஒட்டுத்திண்ண,சிட்டுக்குருவி,
வெட்டுக்கிளி,எட்டுத்திக்கு
எங்க பாத்தாலும் ஒன் நெனப்பு..
சங்கறுத்த சாவலா துடிக்குதடி
எம் பொழப்பு!!

29ம் முறை சேது படம் பார்த்த நள்ளிரவில் என் மனதும் இப்படி
பிதற்றியது அன்பின் தேடல் தானே?! இதற்கு முன் சந்தித்திராத, பேசியிராத,பழகியிராத அன்புள்ளங்களின் வார்த்தைகள்
என் நினைவுக்குளத்தில் கல்லெறிய ,சலனமற்று கரைமோதும் அலைகளாகிறது மனது!! அன்பு மனது சார்ந்தது
அன்புள்ளங்களை,அன்பின் தேடலை வார்த்தைகளில் முன் வைக்கிறவர்களை அறிவுக்கண் கொண்டு பார்ப்பதில்லை நான்!!

"வாழைமரங்களைப்போலவே  வாழ்க்கை மரத்திலும் சம்பவ இலைகள் உதிர்வதே இல்லை" எனும் நா.முத்துக்குமாரின் வரிகள்தான் எவ்வளவு உண்மையானவை?!
    
                          - பாலா.
 

 

வியாழன், 19 டிசம்பர், 2013

மௌனக்கூச்சல்.

எப்போதெல்லாம் மனது ரசனையற்று,சலிப்பின் மீது படரத்தொடங்குகிறதோ அப்போதெல்லாம் மனதின் வேருக்கடியில் நீரூற்றும் சிலிர்ப்பை ஏற்படுத்த நல்ல இசையோ, அல்லது நல்ல புத்தகங்களோ போதுமானதாகிறது! இசை மனதிற்கு நெருக்கமானதென்றால்
புத்தகங்கள் மனதின் ஆழத்திற்கு
நெருக்கமானதாய்..!!

பள்ளியேகிய முதல்நாள் பயத்தின் மொத்த உருவாய் அமர்ந்திருக்கும்
குழந்தைகளைப்பார்த்து,சிநேகமாக,
வாஞ்சையாகச் சிரிக்கும் ஆசிரியர்
போலத்தான் ஒவ்வொரு புத்தகமும்.ஒரு புத்தகத்தின் மிகப்பெரும்பலம் ,அதைப்படிக்கிறவர்களை எழுதத்தூண்டுவது; வாசிப்பவர்களெல்லாம் எழுதத்தொடங்கி விட்டால் படைப்புகளின் அழகு தோட்டத்துப் பூக்களாய்த்தெரியாது. அவரவர் வீட்டுத்தொட்டிச்செடியாகத்தான்
தெரியும்..!!

வாசிப்பின் நேசத்தை, மகத்துவத்தை நம்மில் அறிமுகப்படுத்தியது பெரும்பாலும் வீட்டிலிருப்பவர்களோ,நூலகங்களோ தான்..பெரும்பாலும்
நம் நற்பண்புகள், நல்ல பழக்கங்கள் எல்லாமே அம்மாக்களிடமிருந்தே வேர் பிடித்தெழுகின்றன.புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
என்னில் துளிர்விட்டது அம்மாவிடமிருந்துதான்.
தறிக்குழி இருப்பிடமருகே  விரித்துவைத்த படி கிடக்கும் ரமணிச்சந்திரன் நாவல்கள் தான் அறிமுகப்படுத்தின வாசிப்புலகின் முதற்படியை. 4வரி நோட்டுக்காகிதத்தில் பென்சிலால்
" பொன்னியின் செல்வன்" என்றெழுதி சட்டைப்பைக்குள் திணித்து கிளை நூலகத்தில் அம்மா எடுத்துவரச்சொன்னநாளில்
செருப்பு வாங்க வக்கில்லாமல் பங்குனி வெயில் பாதம் சுட ,நடையும் ஓட்டமுமாகச்சென்ற அந்த பிரதான சாலையை மனதளவில் இன்றும் கடக்கமுடிவதில்லை.!!

கசப்பான நிகழ்வுகளின் ஏதோ ஓர் மூலையில் இனிப்பான நிகழ்வுகளும் இலைமறைக்காயாக
இருப்பை உணர்த்திக்கொண்டுதான்
இருக்கின்றன. ஓட்டமும் நடையுமாக மூச்சிரைக்க எடுத்துவந்த புத்தகத்தின் பக்கங்களில் இதமாக இளைப்பாறிய மனக்கண்களில் வந்தியத்தேவனும், பூங்குழலியும் வந்துபோன அதிர்வை என்னவென்று சொல்வது?!!

இன்றைய பரப்பான செய்தி நாளை ஒரு நிகழ்வாகிறது.மற்றொருநாள் அச்செய்தி சம்பவமாகிறது. புத்தகக்கடைகளும் அப்படித்தான்..
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் வாசனையை நுகர்ந்து விட்டு, வாங்காமல் நகரும் வேளைகளில் மனது மட்டும் அங்கிருந்து வர அடம் பிடிக்கிறது சிறுபிள்ளையென.இன்றும் விலைகேட்டு வாங்க முடியாத புத்தகங்களுக்காக கடைவாசலின் முன்பு அழுதபடி நிற்கிறது மனதின் தவிப்பு.!!

நிலவுள்ள வானில் விண்மீன்களும் ஒளிதரத்தவறுவதில்லை. புதிய புத்தகக்கடைகளுக்கு சற்றும் சளைத்தவையல்ல பழைய புத்தகக்கடைகளும்.ஜெயகாந்தன் ,பாலகுமாரன்,சுஜாதா,வைரமுத்து
போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை தனித்தனியே பிரித்து வைக்காமல்,அனைவரையும் ஒரே இடத்தில் சங்கமிக்கச்செய்கிற அற்புதக்குவியல் பழைய புத்தகக்கடைகள்.வாராவாரம் 20 ரூ கொடுத்து விகடன் வாங்குமளவு வசதியிருந்தாலும்
14ரூபாய்க்கு நெட்பேக் ஈசி பண்ணியது போக மீதமிருக்கும் 6ரூபாய்க்கு பழையவிகடன் 2 வாங்கிவிடலாமேயென்று கணக்குப்
போட்டுப்பார்க்கிறது வறுமைக்கு
வாக்கப்பட்ட சிறுபுத்தி..எந்த ஊருக்குச்சென்றாலும் அங்கிருக்கும் பழைய புதிய புத்தகக்கடைகளுக்குள் நுழையத்தவறுவதில்லை!!

புத்தகங்களைப்பரிசளிப்பவர்கள் நம்முன் இன்னொரு உலகத்தை அழகாய் பரப்பிச்செல்கிறார்கள்..
" தமிழ் போல் என்றும் மங்காத புகழோடும் புன்னகையோடும் வாழ்க" எனறு முதன் முதலாக புத்தகத்தை பரிசளித்த சகோதரியின்
கையெழுத்து," நேர் நேர் தேமா, என் நேர் எதிர் மா.மா என 8ம் வகுப்பில் நான் கலாய்த்த தமிழாசிரியர் மா.மாரிமுத்து அய்யாவின் கையெழுத்தை நினைவிலடுக்கிச்செல்கிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கூறி,புத்தகம் ஒன்றை பரிசனுப்பிய பெங்களூரில் வசிக்கும் அக்காவின்
சிரிப்பு," எதிர்பாரா இசை நிகழ்ச்சி
உன் புன்னகை" எனஇசைஆசிரியையை  9ம்வகுப்பு இராண்டாமாண்டில்( பெயில்ங்க)கலாய்த்த நியாபங்களை நிழலாடச் செய்கின்றன.!! இந்த இருவருக்கும் ஒரு சேர " புத்தகம் ஒன்றை பரிசளித்தாய்; அதில் நட்பு, அன்பை வாசித்தேன்" என நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது?!!

கதைகள், கட்டுரைகள் , இதிகாசங்கள் , என எத்தனை படைப்புகளைப் படித்திருந்தாலும்
கவிதைகளைப் படிப்பதிலிருக்கும் உற்சாகமே தனிதான். கவிதையெழுதுவது ஜன்னலுக்குள் வானத்தை அடக்குகிற வித்தை. நீண்ட சோம்பல் களையும் ஒற்றைத்தேநீரின் கதகதப்பைத்தரும்  கவிதைகள்..
நெடுங்கவிதைகள் வாசிப்பதை விட
ஹைக்கூ எனும் குறுங்கவிதைகள் வாசிப்பதில் அலாதி பிரியம். இருவரிகளில்  வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன. நெடுங்கவிதைகள் எழுதும் போது, பெரியவர்களின் விரல் பிடித்து நடக்கும் குழந்தைபோல பயத்துடன் அக்கறையுடன் எழுத வேண்டிய நிலை, ஹைக்கூ எழுதுவது அப்படியல்ல, குழந்தைகள் நிறைந்த வீட்டில் பெரியவர்களும் தன்னைக் குழந்தையாக உணர்வதைப்போல். !!

என் புத்தகப்பரணில் கதைகளைவிட
கவிதைத்தொகுப்புகளே அதிகம் குடியமர்கின்றன. அக்கவிதைத்
தொகுப்புகளில் ஹைக்கூக்கவிதைப்புத்தகங்ளே அதிகம்..  எவ்வளவு வயதானாலும்
நம் பெற்றோருக்கு நாம் குழந்தைகள் மாதிரி தானே?!!!

இதழ் பிரியாமல் மெலிதாய் புன்னகைக்கும் நடிகர் விஜயின் புன்னகை ஹைக்கூ கவிதையெனில், முகம் மலர அட்டகாசமாய்ச் சிரிக்கும்  அஜித்தின் புன்னகை நெடுங்கவிதை!!  நெடுங்கவிதைகளை நேசித்தும், ஹைக்கூ கவிதைகளை சுவாசித்தும் நகர்கிறது என் பொழுதுகள்!!

                          - பாலா.
                           








ஞாயிறு, 8 டிசம்பர், 2013

என் மனதின் ஜன்னலருகில்..

வாழ்க்கை எப்பொழுதும் அழகு.. ரசிக்கத்தெரியாதவர்களுக்கு அவ்வாழ்க்கையைப் போலொரு எதிரி இருக்க வாய்ப்பில்லை..
இன்பங்களைவிட துன்பங்கள் பொதிந்துகிடக்கிறவர்களின் வாழ்க்கையிலும் சிறு சிறு சந்தோஷ தருணங்கள் தான் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகொள்ளச்செய்கின்றன..

வாழ்க்கையைப்பற்றி எழுத முழுதாய் வாழ்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.கசப்பான அனுபவங்கள் போதுமானதாகிறது; அத்தி பூத்தாற்போல் சில நல்ல அனுபவங்களும் அதன் வரிசையில்

சுவாரசியமற்று தேங்கிக்கிடக்கும்
வாழ்வின் இடைவெளிகளை சில பயணங்கள் சுகானுபவங்களாக்கி
நகர்கின்றன.. பேருந்தின் ஜன்னலோரம் ஓடும் மரங்களைப்
போல!்!!

ஒவ்வொரு முறையும் "என்ன வாழ்க்க டா" என அலுத்துக்கொள்கிற வேளைகளில்
எதிர்பாராமல் மேற்கொள்கிற சிறு பயணங்கள் வாழ்வின் இன்னொரு புதிய வாசலுக்கு விரல் பிடித்து அழைத்துச்செல்கின்றன..

சரியாக அடைக்கப்படாத பொதுக்குழாய்களில் வீணாக வழிந்தோடும் தண்ணீரைப்போல
உதாசீனமான என் வாழ்வின் சிலபகுதிகளை அர்த்தப்படுத்தியது சிறுசிறுபயணங்கள்தான்

கடலைப்போல் ஓரிடத்தில் தேங்கிவிடுவதில் என்ன சுவாரசியம் இருந்து விடப்போகிறது?ஓடும் நதியாக,விழும் அருவியாக வாழ்வை நகர்த்த ஆயத்தமாகி சமீபத்தில்
வழியனுப்ப ஆளில்லா பயணமொன்றை நான் மேற்கொள்ள வழி நெடுக பசுமையின் கையசைப்புகள்;சேருமிடம் தெரியாமல் திக்கற்றலையும் பறவைக்கு இளைப்பாற ஓர் கிளை இடம் தராமலா இருந்து விடும்?  இலக்கற்ற பயணத்தில் நான் இளைப்பாற அமர்ந்தது அழகான
பூமரக்கிளையில்.!!

வாழ்வு தீரும்வரை தீராவலி கொடுத்த ஓர் பிரிவு மனமுடைத்து
கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில், அறிமுகப்படுத்திக்
கொள்ள புன்னகையை முன் மொழிந்து,அடையாளப்
படுத்திக்கொள்ள அன்பை வழிமொழிகிற இனிய தோழியை
உடன்பிறவா சகோதரியைசந்திக்க நேரும்வாய்ப்பு இந்தப்பயணத்தில்..

நான் ஊருக்கு வந்த செய்தியை குறுந்தகவலனுப்ப,சில நிமிடங்களில் தன் தம்பியை அனுப்பிவைத்து அழைத்துவரச்சொன்ன பேரன்பும்
சகோதரத்துவத்தை உணர்த்தியது!!
அழைத்துப்போக வந்த தம்பி சந்தித்த முதல்நொடியில்  நண்பனாகிப்போனான்.. தயக்கத்துடன் அத்தோழமையின்
வீடேற, வாசலில் நின்று வரவேற்ற
பண்பு, தயக்கத்தை வேரோடு சாய்த்தது,அடுக்களையில்
இருந்தவாறே "வாங்க தம்பி; நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லோரும்
நல்லாஇருக்காங்களா? என்று கேட்ட
வாஞ்சையில் 28 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த தாயை முதல் சந்திப்பில் முன்நிறுத்தியது அந்த அம்மாவின் பரந்த முகமும், நிறைந்த புன்னகையும்!!

ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வேளையில் அவர்களின் அப்பாவை
சந்திக்க நண்பன் அழைத்துச்செல்ல
'வா மா, உட்காருங்க, டீ சாப்பிடுங்க
என அடுத்தடுத்து நேசத்தை அடுக்கிய அந்த அப்பாவின் கரம் பற்றி சிறிது தூரம் நடக்கத்தோன்றிற்று .. அலுவலில் ஆழ்ந்திருந்த அவரை தொல்லை
செய்யாமல் விடைபெற்று மறுபடியும் வீடடைந்தோம்..

சாப்பிடச்சொல்லி வற்புறுத்திய போது, நேரமின்மையை காரணம்
காட்டி நழுவ நினைத்த போது
" ஒழுங்கா சாப்பிட்டு போ" என்று
மிரட்டும் தொணியில் பார்வையால்
அனைவரும் கட்டளையிட , அன்பிற்கிணங்கி  சாப்பிடத்தொடங்கினேன், அருகிலமர்ந்து அம்மா பரிமாற,
அவர்களருகே அமர்ந்த மகள் கன்னக்குழிச்சிரிப்பில் அமைதியாய் கதைத்துக்கொண்டிருக்க அளவு தெரியாமல் ரசித்துண்ட பிரியாணியின் ருசியில் மனதும்
வயிறும் ஒரு நிறைந்ததில் பெரும்
மகிழ்ச்சி..!!

பிரியாவிடை பெற்று பிரிய நேர்கையில்; என் கையில் சிறிது பணத்தை திணித்து அனுப்பிய அம்மாவிற்கு காலம் முழுதும்
நன்றிக்கடனடைக்கும் பாக்கியம்
கிடைத்ததை என்னவென்று சொல்வது? கருணையை,அன்பை
தம் அடையாளமாய் வைத்திருக்கிற
மனிதர்கள் உருவில் கடவுள் தன்
இருப்பை உணர்த்திக்கொண்டுதான்
இருக்கிறார்..!!

பஸ் ஏற்றிவிட வந்த நண்பன் பைக்கிலிருந்த பையொன்றை  என்னிடம் தந்து புன்னகைத்து கையசைத்துப்பறந்தான்..
புறப்பட தயாரான நிலையில்
"பஸ் ஏறிட்டியா? பாத்துப்போ!''
வென குறுந்தகவல் சகோதரியான
அத்தோழியிடமிருந்து.. எனக்குள்
நானே புன்னகையித்தவாறு சரி மா யென பதிலனுப்பி ,அமர்ந்திருந்த
இருக்கையின் ஜன்னலின் வெளியே
நோக்க, எங்கிருந்தோ கூட்டமாய்
தரையிறங்கிய கொக்குகள் முழு
வானை புவியில் போர்த்தியமர்ந்த காட்சியின் வியப்பு மீண்டுமொரு
முறை அக்குடும்பத்தினரை மனதில் பதித்துப்பறந்தன!!

குறும்பென்பது சில குழந்தைகள் பிறக்கும் போதே கூடப்பிறந்துவிடுகின்றன.. அக்குறும்பு வளர்ந்து பெரியவர்கள்
ஆனபின்பும் தொடர்வது இன்பமான பேரவஸ்தை.. என்னருகிலமர்ந்த ஓர்
குழந்தையின் புன்னகையும்,குறும்பும் சென்றமுறை பயணத்தில் சந்தித்த மென்பொருள்
நிறுவன மேலதிகாரியான ஓர் அக்காவை நினைவூட்டின இந்தப்பயணத்தில்..
உண்ட மயக்கம் தொண்டருக்கு மட்டுமல்ல,என்போல் குண்டர்களுக்கும் உண்டென்பது
போல் லேசாக கண்ணயர " காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்; கரையுது எம்மனசு உன்னால" என்று யாருடைய செல்போன் அலறியதென உத்தேசித்த நொடிப்பொழுதில் ஓர் முறை மட்டும் அலைபேசிய அயல்நாட்டில் வசிக்கும் மருத்துவ
சகோதரியை நியாபகப்படுத்தியது
அந்தப்பாடல்.. இப்படி ஒருபயணத்தில் பல மனிதர்களின்
நினைவுகள்..

என் பயணத்தில் என்னை சந்தித்தவர்களுக்கு நான் ஹைக்கூ
கவிதை போலத்தான்.. இருவரிகளில் முடிந்து விடலாம்..
நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் என்னில் தொடர் க(வி)தைகளாக.. பூக்கடையை
கடக்கிற காற்றில் கலந்திருக்கும்
வாசத்தைப்போல் அத்தனைமனிதர்களின் நேசமும்
என் மனதின் ஜன்னலருகே பசுமையான காட்சிகளாக..

என் நிறுத்தத்தில் என்னை இறக்கிப்போன பேருந்தின் பின்னால்
ஓடும் தூசிப்புழுதிச்சுழலாய் சுழன்று கொண்டே.. மெல்ல
நடந்து சைக்கிள் ஸ்டாண்ட் உள்
நுழைய,பண்பலையில் ஒலித்துக்
கொண்டிருந்தது, எல்லோர்
வாழ்வோடும் ஒன்றிப்போகும்
நா.முத்துக்குமார் எழுதிய
"ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப்போகாது;மறுநாள்
வந்துவிட்டால் துன்பம் தேயும்
தொடராது" எனும் பாடல்..

வீட்டை நோக்கி எதிர்காற்றில் சைக்கிளை செலுத்த முனைகையில் அருகிலிருந்த
தேவாலயச்சுவற்றில் தென்பட்டது
" நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக்
கைவிடுவதுமில்லை" எனும் வாசகம்..

வாழ்க்கை எப்பொழுதும் அழகு !!!
           
                           - பாலா .