வியாழன், 19 டிசம்பர், 2013

மௌனக்கூச்சல்.

எப்போதெல்லாம் மனது ரசனையற்று,சலிப்பின் மீது படரத்தொடங்குகிறதோ அப்போதெல்லாம் மனதின் வேருக்கடியில் நீரூற்றும் சிலிர்ப்பை ஏற்படுத்த நல்ல இசையோ, அல்லது நல்ல புத்தகங்களோ போதுமானதாகிறது! இசை மனதிற்கு நெருக்கமானதென்றால்
புத்தகங்கள் மனதின் ஆழத்திற்கு
நெருக்கமானதாய்..!!

பள்ளியேகிய முதல்நாள் பயத்தின் மொத்த உருவாய் அமர்ந்திருக்கும்
குழந்தைகளைப்பார்த்து,சிநேகமாக,
வாஞ்சையாகச் சிரிக்கும் ஆசிரியர்
போலத்தான் ஒவ்வொரு புத்தகமும்.ஒரு புத்தகத்தின் மிகப்பெரும்பலம் ,அதைப்படிக்கிறவர்களை எழுதத்தூண்டுவது; வாசிப்பவர்களெல்லாம் எழுதத்தொடங்கி விட்டால் படைப்புகளின் அழகு தோட்டத்துப் பூக்களாய்த்தெரியாது. அவரவர் வீட்டுத்தொட்டிச்செடியாகத்தான்
தெரியும்..!!

வாசிப்பின் நேசத்தை, மகத்துவத்தை நம்மில் அறிமுகப்படுத்தியது பெரும்பாலும் வீட்டிலிருப்பவர்களோ,நூலகங்களோ தான்..பெரும்பாலும்
நம் நற்பண்புகள், நல்ல பழக்கங்கள் எல்லாமே அம்மாக்களிடமிருந்தே வேர் பிடித்தெழுகின்றன.புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
என்னில் துளிர்விட்டது அம்மாவிடமிருந்துதான்.
தறிக்குழி இருப்பிடமருகே  விரித்துவைத்த படி கிடக்கும் ரமணிச்சந்திரன் நாவல்கள் தான் அறிமுகப்படுத்தின வாசிப்புலகின் முதற்படியை. 4வரி நோட்டுக்காகிதத்தில் பென்சிலால்
" பொன்னியின் செல்வன்" என்றெழுதி சட்டைப்பைக்குள் திணித்து கிளை நூலகத்தில் அம்மா எடுத்துவரச்சொன்னநாளில்
செருப்பு வாங்க வக்கில்லாமல் பங்குனி வெயில் பாதம் சுட ,நடையும் ஓட்டமுமாகச்சென்ற அந்த பிரதான சாலையை மனதளவில் இன்றும் கடக்கமுடிவதில்லை.!!

கசப்பான நிகழ்வுகளின் ஏதோ ஓர் மூலையில் இனிப்பான நிகழ்வுகளும் இலைமறைக்காயாக
இருப்பை உணர்த்திக்கொண்டுதான்
இருக்கின்றன. ஓட்டமும் நடையுமாக மூச்சிரைக்க எடுத்துவந்த புத்தகத்தின் பக்கங்களில் இதமாக இளைப்பாறிய மனக்கண்களில் வந்தியத்தேவனும், பூங்குழலியும் வந்துபோன அதிர்வை என்னவென்று சொல்வது?!!

இன்றைய பரப்பான செய்தி நாளை ஒரு நிகழ்வாகிறது.மற்றொருநாள் அச்செய்தி சம்பவமாகிறது. புத்தகக்கடைகளும் அப்படித்தான்..
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் வாசனையை நுகர்ந்து விட்டு, வாங்காமல் நகரும் வேளைகளில் மனது மட்டும் அங்கிருந்து வர அடம் பிடிக்கிறது சிறுபிள்ளையென.இன்றும் விலைகேட்டு வாங்க முடியாத புத்தகங்களுக்காக கடைவாசலின் முன்பு அழுதபடி நிற்கிறது மனதின் தவிப்பு.!!

நிலவுள்ள வானில் விண்மீன்களும் ஒளிதரத்தவறுவதில்லை. புதிய புத்தகக்கடைகளுக்கு சற்றும் சளைத்தவையல்ல பழைய புத்தகக்கடைகளும்.ஜெயகாந்தன் ,பாலகுமாரன்,சுஜாதா,வைரமுத்து
போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை தனித்தனியே பிரித்து வைக்காமல்,அனைவரையும் ஒரே இடத்தில் சங்கமிக்கச்செய்கிற அற்புதக்குவியல் பழைய புத்தகக்கடைகள்.வாராவாரம் 20 ரூ கொடுத்து விகடன் வாங்குமளவு வசதியிருந்தாலும்
14ரூபாய்க்கு நெட்பேக் ஈசி பண்ணியது போக மீதமிருக்கும் 6ரூபாய்க்கு பழையவிகடன் 2 வாங்கிவிடலாமேயென்று கணக்குப்
போட்டுப்பார்க்கிறது வறுமைக்கு
வாக்கப்பட்ட சிறுபுத்தி..எந்த ஊருக்குச்சென்றாலும் அங்கிருக்கும் பழைய புதிய புத்தகக்கடைகளுக்குள் நுழையத்தவறுவதில்லை!!

புத்தகங்களைப்பரிசளிப்பவர்கள் நம்முன் இன்னொரு உலகத்தை அழகாய் பரப்பிச்செல்கிறார்கள்..
" தமிழ் போல் என்றும் மங்காத புகழோடும் புன்னகையோடும் வாழ்க" எனறு முதன் முதலாக புத்தகத்தை பரிசளித்த சகோதரியின்
கையெழுத்து," நேர் நேர் தேமா, என் நேர் எதிர் மா.மா என 8ம் வகுப்பில் நான் கலாய்த்த தமிழாசிரியர் மா.மாரிமுத்து அய்யாவின் கையெழுத்தை நினைவிலடுக்கிச்செல்கிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கூறி,புத்தகம் ஒன்றை பரிசனுப்பிய பெங்களூரில் வசிக்கும் அக்காவின்
சிரிப்பு," எதிர்பாரா இசை நிகழ்ச்சி
உன் புன்னகை" எனஇசைஆசிரியையை  9ம்வகுப்பு இராண்டாமாண்டில்( பெயில்ங்க)கலாய்த்த நியாபங்களை நிழலாடச் செய்கின்றன.!! இந்த இருவருக்கும் ஒரு சேர " புத்தகம் ஒன்றை பரிசளித்தாய்; அதில் நட்பு, அன்பை வாசித்தேன்" என நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது?!!

கதைகள், கட்டுரைகள் , இதிகாசங்கள் , என எத்தனை படைப்புகளைப் படித்திருந்தாலும்
கவிதைகளைப் படிப்பதிலிருக்கும் உற்சாகமே தனிதான். கவிதையெழுதுவது ஜன்னலுக்குள் வானத்தை அடக்குகிற வித்தை. நீண்ட சோம்பல் களையும் ஒற்றைத்தேநீரின் கதகதப்பைத்தரும்  கவிதைகள்..
நெடுங்கவிதைகள் வாசிப்பதை விட
ஹைக்கூ எனும் குறுங்கவிதைகள் வாசிப்பதில் அலாதி பிரியம். இருவரிகளில்  வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன. நெடுங்கவிதைகள் எழுதும் போது, பெரியவர்களின் விரல் பிடித்து நடக்கும் குழந்தைபோல பயத்துடன் அக்கறையுடன் எழுத வேண்டிய நிலை, ஹைக்கூ எழுதுவது அப்படியல்ல, குழந்தைகள் நிறைந்த வீட்டில் பெரியவர்களும் தன்னைக் குழந்தையாக உணர்வதைப்போல். !!

என் புத்தகப்பரணில் கதைகளைவிட
கவிதைத்தொகுப்புகளே அதிகம் குடியமர்கின்றன. அக்கவிதைத்
தொகுப்புகளில் ஹைக்கூக்கவிதைப்புத்தகங்ளே அதிகம்..  எவ்வளவு வயதானாலும்
நம் பெற்றோருக்கு நாம் குழந்தைகள் மாதிரி தானே?!!!

இதழ் பிரியாமல் மெலிதாய் புன்னகைக்கும் நடிகர் விஜயின் புன்னகை ஹைக்கூ கவிதையெனில், முகம் மலர அட்டகாசமாய்ச் சிரிக்கும்  அஜித்தின் புன்னகை நெடுங்கவிதை!!  நெடுங்கவிதைகளை நேசித்தும், ஹைக்கூ கவிதைகளை சுவாசித்தும் நகர்கிறது என் பொழுதுகள்!!

                          - பாலா.
                           








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக